Wednesday, January 16, 2013

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தமிழர் விடுதலைப் பயணம்

_MG_1308அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிறிலங்கா அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக ‘தமிழர் விடுதலைப் பயணம்’ என்ற பெயரில் நடைபெற்ற ஊர்திப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.
தற்போது அவுஸ்திரேலியா வருகை தந்திருக்கும் சிறிலங்கா கிரிக்கெற் அணி அவுஸ்திரேலிய அணிணை எதிர்த்துப் பல போட்டிகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு நாடுகளும் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் ‘சிறிலங்காவைப் புறக்கணி’ என்ற மகுட வாக்கியத்தோடு தொடர் போராட்டங்கள் அந்தந்த விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective  என்ற அமைப்பும் இணைந்து Trevor Grant  தலைமையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றன.  அனைத்துப் போட்டிகளிலும் சிறிலங்கா அரசின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகள் தாங்கியபடி துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்து பல்லின மக்களிடமும் சிறிலங்கா அரசின் பயங்கரவாதத்தையும் சிறிலங்காவின் கிரிக்கெட் அணியை அவுஸ்திரேலியா ஏன் புறக்கணிக்க வேண்டுமென்றும் பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
அவ்வகையில் தாஸ்மானியத் தலைநகர் ஹோபார்ட், மெல்பேர்ண், சிட்னி போன்ற மாநகரங்களைத் தொடர்ந்து அடெலெய்டில் 13 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா – அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் போராட்டம் நடாத்துவதென முடிவெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கும் Trevor Grant தலைமையில் மெல்பேணிலிருந்து நான்கு ஊர்திகளில் பதாகைகள் தாங்கிய வண்ணம் செயற்பாட்டாளர்கள் அடெலெய்ட் நோக்கிப் பயணித்தார்கள். ‘தமிழர் விடுதலைப் பயணம்’ என்ற பெயருடன் நடைபெற்ற இப்பயணம் சனிக்கிழமை காலை மெல்பேணிலிருந்து புறப்பட்டு சுமார் 800 கிலோமீற்றர்கள் பயணித்து அடெலெய்டை அடைந்தது.
போகும் வழியில் Ballarat, Horsham, Bordertown ஆகிய நகரங்களில் நின்று கவனயீர்ப்புப் போராட்டங்களைச் செய்ததுடன் மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை வினியோகித்து விளக்கங்களை அளித்துச் சென்றனர். மூன்று நகரங்களிலும் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை இப்போராட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கடுமையான மழை பொழிந்தபோதும் போராட்டக்காரர்கள் தமது போராட்ட ஒழுங்குபடுத்தல்களில் ஈடுபட்டனர். மதியநேரம் மழை ஓயத்தொடங்கியதும் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை நோக்கி விரையத்தொடங்கியபோது மைதான வாசலில் மழைத்தூறலில் நின்றபடி ‘சிறிலங்காவைப் புறக்கணி’ ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். பதாகைகளைத் தாங்கியபடி பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி விளக்கங்களை அளித்தனர்.
மதியம் 12 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை மைதான வாசலில் நின்று போராட்டத்தையும் பரப்புரையையும் செய்துவிட்டு மீளவும் மெல்பேண் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர்.
‘தமிழர் விடுதலைப் பயணம்’ ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மெல்பேணில் நிறைவுற்றது. சிறிலங்கா கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் இருக்கும்வரை அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சிறிலங்காவைப் புறக்கணிக்கும் போராட்டம் தொடருமென போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20ம்  திகதி) சிட்னியிலும் அதற்கடுத்த திங்கட்கிழமை (28ம்  திகதி) மெல்பேணிலும் விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில் (Gate 2) போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
_MG_1308 _MG_1316 _MG_1385 _MG_1416 _MG_1426 _MG_1440 DSC_0002 DSC_0008
முன்செல்ல

No comments:

Post a Comment