யாழ்.பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் மாணவர்கள் எவரும் சமுகமளித்திராத நிலையில் பல்கலைக்கழகம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
உயர்கல்வியமைச்சின் உத்தரவுக்கமைவாக குறித்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இன்று ஆரம்பிப்பதெனவும், இதற்கமைய பொங்கல் தினத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் நேற்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
மேலும் பத்திரிகைகளில் இன்று பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என்ற செய்திகளும், விளம்பரங்களும் கூட அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையிலும் மாணவர்கள் எவரும் இன்று பல்கலைக்கழகத்திற்குச் சமுகமளித்திருக்கவில்லை.
இதேவேளை கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டாலேயே கற்றல் செயற்பாடுகளுக்குத் திரும்புவோம் என மாணவர்கள் முன்னரே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பல்கலைக்கழக சுற்றாடல் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று விட்டு வாசலோடு திரும்பிச் சென்றிருக்கின்றனர்.
இதற்கிடையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சில பகுதிகளில் படையினர் பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பல்கலைக்கழகத்திற்குச் செல்லுமாறு கேட்டிருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்குள் மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்குச் சமுகமளிக்காவிட்டால் பதவியை துறப்பேன் என ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்த பல்கலைக்கழக துணை வேந்தர் அடுத்து என்ன செய்யவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment