மன்னார்
மாவட்டத்தில் இராணுவத்தினரால் மீண்டும் மேற்கொள்ளப்படும்
குடும்பப்பதிவுகள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிராக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் மீண்டும் இராணுவத்தினரால்
குடும்பப் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதற்காக புகைப்படம் எடுப்பது
தொடர்பிலும் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்த்; தேசியக்
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின்
கவனத்திற்கு கொண்டுவந்தனர்.இந்நிலையிலேயே இவ்வாறு மேற்கொள்ளப்படும் குடும்பப்பதிவுகள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை உடனடியாக நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கட்டுக்காரன் குடியிருப்பு, பருத்திப்பண்னை, கீலியன் குடியிருப்பு, பேசாலை ஆகிய கிராமங்களில் தற்போது இராணுவத்தினர் குடும்பப் பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர். இக்கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை திரட்டுவதுடன், அம்மக்களின் வீடுகளைத் தனியாகவும் குடும்ப உறுப்பினர்களை குழுவாகவும் புகைப்படமும் எடுக்கின்றனர்.
எதற்காக இப்புகைப்படம் எடுக்கப்படுகின்றதெனத் தெரியாத நிலையில், அம்மக்கள் அச்சம்; காரணமாக எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குடும்பப் பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிராக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளது.
ஏற்கெனவே இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குடும்பப் பதிவுகளுக்கு எதிராக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதன்போது சட்மா அதிபரின் திணைக்களத்தால் இவ் இராணுவப் பதிவுகள் உடன் நிறுத்தப்பட்டு இனி இவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டது’ என்றார்.
No comments:
Post a Comment