Tuesday, January 15, 2013

குண்டுமழை பொழியும் யுகத்தை மீண்டும் உருவாக்க இடமளியேன் – ஜனாதிபதி

mahinகுண்டு மழை பொழியும் யுகத்தை மீண்டும் உருவாக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார். குற்றப்பிரேரணை விவகாரத்தையடுத்து நாட்டில் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்குமிடையில் நேற்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் நடை பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜய தாஸ ராஜபக்ஷ, இலங்கையிலுள்ள 14 நீதிமன்ற வலயங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அரச தரப்பிலிருந்து  பிரசன்ன மாகியிருந்தனர்.
இதன்போது, நீதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளனர். அதனையடுத்து, இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குண்டு ரவைகளால் நாட்டை ஆளக்கூடிய ஒரு யுகத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“நாட்டில் நீதித்துறையை கௌரவமிழக்கச் செய்து அதனூடாக அரசியல் இலாபம் தேடும் குழுக்களை இனங்காணவேண்டியது நாட்டை நேசிக்கும் மக்களின் கடமையாகும்” என்றும் அவ்வேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், சில குழுக்கள் தமது சங்கத்துக்குள் ஊடுருவி அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளனர் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீதித்துறையில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும் தமது சங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment