Sunday, January 13, 2013

உதயன் நாளேடு ஊழியர் மீதும் ஊடக சுதந்திரம் மீதும் தொடுக்கப்படும் இராணுவ புலனாய்வினரின் தாக்குதல்களைப் பன்னாட்டு சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும்

Tயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் வழங்கல் பிரிவின் பணியாளர் பிரதீபன் கடந்த சனவரி 10 ஆம் நாள் (வியாழக்கிழமை)  காலை 5.30  மணி அளவில் இனந்தெரியாத   ஆட்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கடுங்காயத்துக்குள்ளானார்.  உடல் முழுதும் காயம் ஏற்பட்டதுடன் அவரது வலது கை முறிந்துள்ளது.
உதயன் நாளேட்டின் பருத்தித்துறை – மாலி முகவருக்கு  செய்தித்தாள்களை வழங்கிவிட்டு திரும்பும் போதே இந்த மீலேச்சத்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்கியவர்கள் முள்ளுக்கம்பிகளால் சுற்றிக்கட்டப்பட்ட இரும்புக் கட்டைகளால் தாக்கியுள்ளனர்.  பிரதீபன் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் தாக்குதல் நடத்தியவர்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காடையர்களிடம் இருந்து தப்பி ஒரு மினி பேருந்தில் ஏறி நெல்லியடி சேர்ந்த பிரதீபன் அங்கிருந்து நடந்த சம்பவத்தை உதயன் அலுவலகத்துக்குத் தெரிவித்தார்.
பிரதீபன் போலவே உதயன் நாளேட்டின் இன்னொரு பணியாளர் வல்வெட்டித்துறையில் வினியோகித்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பலால் துரத்தப்பட்டார்.  நல்லகாலமாக அவர் ஓடித் தப்பிக் கொண்டார்.
இந்த இரண்டு சம்பவங்கள்  தொடர்பாக நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அண்மையில் வடக்குக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் தூதுவர் கிறிஸ்ரின் றொபின்  ”இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் நிருவாகச் செயற்பாடுகள் தொடர்பாகவும் பலரோடு கலந்துரையாடினேன். இராணுவம் சிவில் அதிகாரிகள் போல் தகவல் திரட்டுகின்றனர். இதனை நான் யாழ்ப்பாணக்  கரையோர பகுதிகளில் நேரடியாக அவதானித்தேன். ஏன் இன்னமும் இராணுவத்தினர் சிவில் நிருவாகத்தில் தலையீடு செய்கின்றனர்” எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இந்தச் செய்திக்கு உதயன் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தமையே இந்தத் தாக்குதல்களுக்கு உடனடிக் காரணம் என நம்பப்படுகிறது.
சனநாயகத்தில் நம்பிக்கையற்ற காட்டுமிராண்டிகளாலேயே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களை டக்லஸ் தேவானந்தா தலைமையிலான இபிடிபி  கட்சியின் துணையோடு இராணுவ புலனாய்வுப் பிரிவே நடத்தியதாக நம்பப்படுகிறது.
உதயன் நாளேட்டின் பணியாளர்கள் தாக்கப்படுவது இது முதல்தடவை அல்ல.  கடந்த யூலை 29, 2011 இல் உதயன்  முதன்மை ஆசிரியர் ஜி. குகதாசன் இனந்தெரியாத ஆட்களால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாகவும் இதுவரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை.
கடந்த நொவெம்பர் மாதம் 27 ஆம் நாள் உதயன் ஆசிரியர் பிரேம்நாத் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் வைத்துத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதல் தலைமை காவல்துறை அதிகாரி சாம் சிகேராவின் கண்முன் நடைபெற்றது.  யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்தநாள் உதயன் முகாமை இயக்குநர் திரு இ. சரவணபவனின் வண்டிக் கண்ணாடிகள் அவரது கண்முன்னே மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ புலனாய்வுத் துறையினரால் தாக்கிச் சேதமாக்கப்பட்டது.  இது தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முழக்கத்துக்கு ஒரு இராணுவம் மற்றும் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தும்  இப்படியான காட்டுமிராண்டித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. வேலியே பயிரை மேய்வது போல  சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியர்களே சட்டத்தை மீறும் போது தாக்கப்படுவர்களுக்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்பாகப் போய்விட்டது. பேச்சுத் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் இராணுவத்தினால்  காலில் போட்டு மிதிக்கப்படுகிறது.
கடந்த காலத்திலும் பேச்சு எழுத்துச் சுதந்திரத்துக்காக உதயன் பாரிய விலை கொடுத்து வந்துள்ளது.
மே 26, 2006 இரவு இனந்தெரியாத கும்பல் உதயன் அலுவலகத்தைத் தாக்கியபோது பஸ்தியான் ஜெரோஜ் சகாயதாஸ் (36)  மற்றும்  இராசரத்தினம் இரஞ்சித்குமார் (25) கொல்லப்பட்டனர்.
ஓகஸ்ட் 15, 2006  உதயன் வண்டியோட்டி எஸ்.பாஸ்கரன் புத்தூரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏப்ரில் 29, 2007 உதயன் நிருபர் எஸ்.இராஜிவர்மன் அலுவலகத்துக்குத் திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
யூன் 21, 2007 உதயன் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த வி. நிமலராஜ் கடத்தப்பட்டார். அவர் என்ன ஆனார் என்பது பற்றிய  தகவல் இதுவரை இல்லை.
பெப்ரவரி 26, 2009  சுடரொளி முன்னாள் ஆசிரியர் என். வித்தியாதரன் கொழும்பில் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்.  பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மே 28, 2011  உதயன் செய்தியாளர் எஸ். கதிரவன் உதயன் பணிமனையில் வைத்துத் தாக்கப்பட்டார்.
யூலை 29, 2011 உதயன் செய்தி ஆசிரியர் ஜி.குகதாசன் அவர்களை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் 3 நாட்கள் மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் கிடந்தார்.
இந்தக் கொலைகள், கொலை வெறித் தாக்குதல்கள் இன்றைய சனாதிபதி மகிந்த இராசபச்சே பதவிக்கு வந்த பின்னர் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரில் 2004  ஆம் ஆண்டுக்குப் பின்னர் தர்மரத்தினம் சிவராம்  உட்பட 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 30 பேர் தமிழர்கள், 3 பேர் சிங்களவர்கள்,  1 முஸ்லிம் ஆவர்.
ஊடகவியலாளர் ஜெயபிரகாஷ் திஸ்சநாயகம் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்குப் பின் கொழும்பு உயர் நீதிமன்ற சிங்கள நீதிபதியால்  அவருக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  வெற்றிவேல் ஜெசீகரன் அவரது துணைவியார் வடிவேல் வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளார்கள்.
நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா ஆளும் கட்சி நாடாளுமன்ற தெரிவுக் குழு  உறுப்பினர்களால் மிகக் கேவலமாக அருச்சிக்கப்பட்டார். விசர் மனிசி என்று வருணிக்கப்பட்டார். குற்றவாளியாகக் காணப்பட்ட அவரது பதவியை சனாதிபதி மகிந்த இராசபச்சா அடுத்த இரண்டொரு நாளில் பறிக்க இருக்கிறார்.  உச்ச நீதிமன்ற சிங்கள நீதிபதிக்கே இந்தக் கதி என்றால் தமிழர்களைப் பற்றி கேட்க வேண்டியதில்லை.
இப்படியான ஒரு தெரிவுக்குழுவுக்கு வருமாறுதான்  சனாதிபதி மகிந்த இராசபக்சே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இது ஈயைப் பார்த்து சிலந்தி தனது வீட்டுக்கு வருமாறு விடுத்த அழைப்புப் போன்று இருக்கிறது.
உதயன் நாளேட்டு ஊழியர்கள் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான, கேவலமான, மனித குலம் வெட்கித் தலைகுனிய வைக்கும் தாக்குதல்களை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உதயன் நாளேடு ஊழியர் மீதும் ஊடக சுதந்திரம் மீதும் தொடுக்கப்படும் இராணுவ புலனாய்வினரின்  தாக்குதல்களை பன்னாட்டு சமூகம் கண்டிக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
T

No comments:

Post a Comment