இலங்கைக்கு
வந்து யுத்தத்தின் பின்னரான நிலைமையை மதிப்பிடுமாறு இலங்கை அரசாங்கம்
விடுத்த அழைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
நவநீதம்பிள்ளை இன்னும் பதிலளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளை, தனது வருகைக்கு முன்னோடியாக விதித்த நிபந்தனைகள்
இரண்டும் நிறைவேற்றப்பட்டுவிட்ட போதிலும் அவர் தனது வருகை குறித்து இன்னும்
பதிலளிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடந்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படுவதற்கு முன்னர், நாம் ஓர் அழைப்பை அவருக்கு விடுத்திருந்தோம்.
இருப்பினும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி, தனது அலுவலக அணியினரின் முதற்கட்ட விஜயம் இடம்பெற்ற பின்னர் தான் இலங்கை வந்தால் போதும் என நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்’ என ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 2011இல் வெளியானது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தூதுக்குழுவொன்று இலங்கைக்கு சென்ற வருடம் செப்டெம்பரில் வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டது. ஆயினும் இலங்கைக்கு வருவதற்கான தனது விருப்பத்தை அவர் இன்னும் இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கவில்லை’ என அமைச்சர் கூறினார்.
‘இலங்கை வந்து, முன்னேற்றங்களை நேரில் பார்க்கும்படி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் பலமுறை கூறிவிட்டோம். அவர், முன்வைத்த நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. எனவே அவர் வருவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என அமைச்சர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment