Tuesday, January 08, 2013

இலங்கையின் நிலைமைகளை ஆராய்கின்றோம்; பொதுநலவாய மாநாடு பங்களிப்பும் பரிசீலனை; கனேடிய அமைச்சர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

canadaஇலங்கையின் நிலைமை குறித்து கனடா முழுமையாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுதல் மனித உரிமைகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்களில் இலங்கை இவ்வருட நடுப்பகுதிக்குள் ஆக்கபூர்வமாக செயற்படாதபட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான விடயத்தை கனடா தீவிரமான மறுபரிசீலனைக்குட்படுத்தும் என்று கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன்கென்னே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள கனேடிய அமைச்சர் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் வாசஸ்தலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்தார்.
இதன்போதே அவர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வில் அரசின் இழுத்தடிப்புச் செயற்பாடுகள், வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமை, மனித உரிமைகள் தொடர்பில் அரசின் கவனயீனம் உட்பட பல விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது சுமந்திரன், கனேடிய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கில் படைகளின் பிரசன்னம் போன்ற விடயங்களையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவற்றுக்கெதிராக குரல்கொடுக்கும் போது அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர், இலங்கையின் நிலைமை குறித்து கனடா முழுமையாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தமிழர் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இலங்கை அரசுக்கே அவ்வப்போது அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மேம்பாடு ஜனநாயகத்தை நிலைநாட்டும் செயற்பாடுகள் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு ஆகியவற்றை இந்த வருட நடுப்பகுதிக்குள் இலங்கை அரசு வெளிப்படுத்தத் தவறினால் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான யோசனையை அரசு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிவருமென்றும் கனேடிய அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment