இன்று
கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர்
சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி
அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது
வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர
விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு
செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.
உங்கள் பணத்தைக் கறக்கும் மேற்படி ஆட்கடத்தல்காரர்கள் உங்களை நட்டாற்றில்
விடுகிறார்கள் என்பதையும் கவனத்திலெடுங்கள் என்று தெரிவித்தார்.
கனடா அகதிகள் விவகாரத்தில் காருண்யமாகச்
செயற்படும் நாடு என்பது உண்மை. அதற்காக அந்த நடைமுறையை
ஆட்கடத்தல்காரர்களினுடைய முயற்சிகளினூடாக மீற முயன்றால் நீங்கள்
அவர்களிற்குக் கட்டிய காசை இழக்கின்றதைத் தவிர எதுவுமே உங்களிற்கு
நடக்கப்போவதில்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.
சிறீலங்கா உளவுப்பிரிவு மற்றும்
படைத்துறைகளின் சேவைகளினால் மிக அண்மைக் காலங்களில் அவர்கள் பயணத்துறையை
(இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டுமுன்பே) பயணங்கள்
தடுக்கப்பட்டிருக்கின்றன. இது போன்றே கடந்த இரண்டு வருடங்களாக இந்தோனேசியா,
தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும்
தடுக்கப்பட்டன என்பதையும் தெரிவித்தார்.
கனடியப் பிரதமர் இந்த ஆட்கடத்தல்
முயற்சிகளைத் தடுக்க 12 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்ட
கனடியக் குடிவரவு அமைச்சர் கனடிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்புப்
பிரிவுகள் ஏனைய நாடுகளிலுள்ள அந்த நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுடன் தகவற்
பரிமாற்றத்தில் ஈடுபட்டிக்கின்றன என்பதையும் தெரிவித்தார்.
இதேவேளை போரின் பின்னரான இணங்களின் மீள
இணைதல் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் பெறவில்லையென்பது தொடர்பான
கனடாவின் அக்கறையையும் பதிவு செய்ததுடன், பொதுநலவாய நாடுகளின்
குறிக்கோள்களிற்கு ஏற்ப சிறீலங்கா இனங்கள் ஒன்றிணைந்து வாழுதல் என்ற
தேசியப் பிரச்சினையில் ஒரு தீர்வைக் காண வேண்டுமெனவும், போரின் போது
மனிதவுரிமை விவகாரங்களில் இரு தரப்பும் புரிந்த குற்றங்கள் ஆராயப்பட
வேண்டுமென்றும், கனடா பிற நாடுகள் ஏற்படும் மனிதவுரிமை விவகாரங்கள்
தொடர்பான வன்முறைகளிற்கு எதிராகவே செயற்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது அமைச்சர் தனது துறை
சாராத, ஆனால் சிறீலங்கா-கனடா பாராளுமன்ற நட்புறவுக் கழகத்தை அண்மையில்
ஆரம்பிப்பதற்கு முழுமூச்சாக செயற்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும்
இணைத்துக் கொண்டது இராஜதந்திர வரையறைகளிற்குள் உள்வராத ஒரு செயலாகவும்,
அமைச்சரின் இலங்கைப் பயணத்தின் நேர்மைத் தன்மையைக் கேள்வி கொள்ள
வைப்பதாகவும் அமைந்திருந்தது.
இவ்வாறு அமைச்சருடன் இந்த முறை விஜயம்
செய்த பாராளுமன்ற உறுப்பினரின் கடந்த முறைய இலங்கைப் பயணம் அவரது தனிப்பட்ட
பயணம் எனவும், அதற்கும் கனடிய அரசிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லையெனவும்
கனடிய வெளிவிவகார அமைச்சர் அறிக்கை வெளியிடுமளவிற்கு பிரச்சினையை
ஏற்படுத்திய ஒருவரை அமைச்சர் தனது பயணத்தில் இணைத்திருப்பது கனடியப்
பிரதமரின் செயற்பாடுகளிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒன்றாகவே
கருதப்படுகிறது.
அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது மன்னார்
பேராயர் இராயப்பு ஜோசப், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ்,
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள், கடற்படைத்
தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தயபாய இராஜபக்ச
ஆகியோரையும் சந்தித்தத்தோடு, கனடாவிலுள்ள சிறீலங்கா நட்புறவுக்கழகத்தின்
ஏற்பாட்டின் பெயரிலான சில விழாக்களிலும் கலந்து கொண்டார்.
அத்தோடு அமைச்சர் ஜேசன் கெனி தற்போது
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைக்கான நிவாரண நிதியாக 19
ஆயிரம் டொலர்களை இலங்கையிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான கரிராஸ்
அமைப்பிற்கு வழங்கியுள்ளார். இந்தத் தொகை இலங்கை நாணயத்தில் 1.9 மில்லியன்
ரூபாய்களேயாகும்.
No comments:
Post a Comment