Saturday, January 12, 2013

விடுதலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த அரசியல்வாதிகளை காணவில்லை!- ரிசானாவின் தாயார் ஆதங்கம்

20130111-211624.jpgமகளுக்கு விடுதலைபெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்கள். நான் மகளைப் பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும். என்று ரிசானாவின் தாயார் பரீனா அழுதுகொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
ரிசானாவின் தாயார் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மகளின் செய்தியை அறிந்துகொள்ளும் வரை மகள் வீடுவந்து சேருவாள். அரசாங்கம் இதனைச் செய்யும் என்று நம்பியிருந்தேன். எனது நம்பிக்கை வீணாகிவிட்டது. மகளைப் பறிகொடுத்து விட்டேன். மகளுக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள் என்றார்.

இதேவேளை சுகயீனமுற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று விடுதலையாகி தனது வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த ரிசானாவின் தந்தை நபீக்கிடம் இந்தத் துயரச் செய்தி வியாழக்கிழமை இரவே தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் ஒரு இருதய நோயாளி என்பதால் இச்செய்தி மிகவும் நிதானமாகவே தெரிவிக்கப்பட்டது என ரிசானாவின் தாயாரின் சகோதரர் எம். லரீப் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மூதூரிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொடர்ந்தும் ரிசானாவின் வீட்டை நோக்கி ஏராளமான மக்கள் சமுகமளித்து ஆறுதல் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இன்று சனிக்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ரிசானாவின் வீட்டுக்கு சமுகமளிப்பதாக தமக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் எம்.லரீப் தெரிவித்தார்.

No comments:

Post a Comment