Thursday, June 13, 2013

சிறிலங்கா படை அதிகாரிகளுக்காக குன்னூரில் அறிவிக்கப்படாத ஊரடங்கு

connor-policeவெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்தில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழ்நாட்டின் குன்னூர் பகுதியில் அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் போன்ற நிலை காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம், இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன.  அந்தப் பிரதேசத்தில் 7 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறிலங்காவைச் சேர்ந்த விங் கொமாண்டர் எம்.எஸ்.பண்டார தசநாயக்க, மேஜர் சி.எஸ்.ஹரிஸ்சந்திர ஹெட்டியராச்சிகே ஆகியோர் கடந்த 27ம் நாள் பயிற்சிக்காக இங்கு வந்தனர்.

இவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இராணுவப் பயிற்சி முகாமை முற்றுகையிட முயன்ற பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 135 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான 10 மாதகாலப் பயிற்சி  கடந்த ஜுன் 10ம் நாள் ஆரம்பமானது.
இதற்கு இடையூறு ஏற்படாத வகையில், வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெலிங்டன் நுழைவாயில் பகுதிகளில், இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த வழியாக செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் பகுதியில் குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு உறவினர்கள் வருவதற்கும், தங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைகள், பொதுஇடங்கள், பஸ்நிறுத்தங்களில் தொடர்ந்து நிற்கவோ, நடமாடவோ அனுமதிக்காமல் பொதுமக்களை காவல்துறையினர் கலைத்து வருகின்றனர்.
தங்கு விடுதிகளில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதனால் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பது போன்று உணர்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment