Saturday, June 15, 2013

ராஜிதவுக்கு இருக்கின்ற முதுகெலும்பு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லை

mano(73)13ஆம் திருத்தத்தில் கை வைப்பதற்கு நாட்டில் எவருக்கும் நாம் இடமளியோம். அதனை பாதுகாக்க நான் எனது பதவியையும் இழக்க தயார் என மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். எனது மிக நீண்டகால நண்பர் ராஜித சேனாரத்னவுக்கு இருக்கின்ற இந்த முதுகெலும்பு, அரசாங்கத்தில் இன்று இருக்கின்ற எந்த ஒரு தமிழ் அரசியல்வாதிக்கும் இல்லை என்பது நிதர்சனமிக்க கவலை தரும் உண்மையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, 13ஆம் திருத்தம் தொடர்பில் இன்று தெரிவித்துள்ள பகிரங்க நிலைப்பாடு தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
13ஆம் திருத்தத்தின் மீது கைவைக்க விட மாட்டேன், அதற்காக எனது பதவியையும் இழக்க தயார் என்று ஊடகவியலாளரிடம் இன்று ராஜித கருத்து தெரிவித்துள்ளார் என்று தெரிந்து கொண்ட உடனேயே, ராஜிதவை தொலைபேசியில் அழைத்து எனது பாராட்டுகளை தெரிவித்தேன்.
நானும் அவரும் மிக நீண்ட கால நண்பர்கள். இலண்டனில் இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவை அவர் இலங்கைக்கு அழைத்து வந்து அரசியலில் ஈடுபட வைத்த காலத்தில் இருந்து எனக்கு அவருடன் நட்பு உண்டு. ஆகவே அவரது இந்த நிலைப்பாடு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்த காலத்திலேயே மாகாணசபைகளை ஆதரித்து, அதனால் வன்முறையை எதிர்கொண்டவர் அவர்.
கடந்த காலங்களைப்போல் இன்றும், 13ஐ காப்பாற்ற தான் எந்த ஒரு சூழலுக்கும் முகம் கொடுக்க தயார் என அவர் எனக்கு சொன்னார். ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரிக்க எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் தயாராக இல்லை என்ற தனது மனவருத்தத்தையும் அவர் எனக்கு தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும், இடதுசாரி அமைச்சர்களும் இதுபற்றி திடமான கருத்துகளை தெரிவிப்பதாகவும், ஆனால் தமிழ் அமைச்சர்களும், எம்பீக்களும் இது தொடர்பாக பகிரங்க நிலைப்பாடுகளை எடுக்க இன்னமும் தயார் இல்லை எனவும் எனக்கு அவர் சொன்னார்.

No comments:

Post a Comment