
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்றுதொட்டு கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடலில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். சோழ, பாண்டியர் காலத்தில் இந்தக் கடலில் முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் இடம்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் கிழமைக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்குத் தமிழக மீனவர்கள் தொழுகை நடத்துவதற்காக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்றுப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. வட இலங்கையில் இருந்தும் – குறிப்பாக பாசையூர், குருநகர் – கத்தோலிக்கத் தமிழர்கள் தோணிகள் மூலம் இந்த சமய விழாவுக்குச் சென்று கலந்து கொண்டார்கள்.
1974 எழுதிய உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கையின் படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு அடியார்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
கச்சதீவை தாரை வார்த்துக் கொடுத்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்த இராமநாதபுரம் மன்னர் இராமநாத சேதுபதி, மத்திய அரசின் இந்த முடிவு துக்ககரமானது, கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983 இல் தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கச்சதீவு எல்லை மாற்றி அமைக்கப்பட்டது. இப்போதைய சிக்கலுக்கு இந்தச் சட்டம் இன்னொரு காரணம் ஆகும்.
கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையும் தாரை வார்த்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை சனி பிடித்துக்கொண்டது. 1983 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 இல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடங்கிய தாக்குதல் இன்று வரை 30 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை பிரதமர் இந்திரா காந்தி யாரையும் கலந்து கொள்ளாமல், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் ஏதோ தனது சீதனச் சொத்து என்று நினைத்து பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவோடு உடன்படிக்கை எழுதிக் கையளித்துவிட்டார். அன்று முதல் தடியைக் கொடுத்து அடிவாங்கின கதைதான். வைகோவின் கணக்கின் படி 578 மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு அல்லது அவர்களது படகுகள் மூழ்கடிகடிக்கப்பட்டதால் பலியாகியுள்ளார்கள்.
1974 இல் கச்சதீவு பற்றிய உடன்படிக்கை எழுதப்பட்ட போது திமுக தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. முதல்வர் கருணாநிதி ஒப்புக்கு இந்தியப் பிரதமர் இந்தியா காந்திக்கு கடிதம் எழுதித் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். யூன் 29, 1974 அன்று அனைத்துக் கட்சிகளது மாநாட்டைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். ஆனால் தீர்மானத்தில் கையெழுத்திட அதிமுக மறுத்துவிட்டது.
அதன் பின் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுகவும் அதிமுகவும் கண்ணா மூச்சி பிடித்து விளையாடின. கலைஞர் கருணாநிதியை செல்வி ஜெயலலிதாவும் ஜெயலலிதாவை கலைஞர் கருணாநிதியும் மாறி மாறி திட்டிக் கொண்டு வருகிறார்கள்.
2006 இல் திமுக அரசு மீண்டும் பதவிக்கு வந்தபோது இந்தியா கச்சதீவை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டு மீண்டும் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கச்சதீவுச் சிக்கலுக்கு அதனையும் அதனை அண்டிய கடற்பகுதியையும் மீன்பிடிக்கவும், வலைகளைக் உலர்த்தவும் யாத்திரை போகவும் முடிவில்லாத (in perpetuity) குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். அதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், கச்சதீவு இலங்கைக்குக் கையளிக்கப்பட்டதை நியாயப்படுத்தினார். “இந்தக் குறுணித் தீவை இலங்கைத் தீவுக்கு இந்தியா கையளித்தது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் நன்மைகருதியே” எனக் கூறினார். (இந்து) இந்த அரசியலில் சதுரங்கத்தில் பலியானவன் தமிழக மீனவன்தான். ஒவ்வொருமுறையும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது தமிழக முதல்வராக இருப்பவர் அதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு சூடாகக் கடிதம் எழுதுவார்கள். அது தொடர்கதையாக இந்தப் பொழுதுவரை நீடிக்கிறது.
இன்று கூட 25 – 30 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வப்போது பிடிபட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அதே சமயம் புதிதாக மீனவர்கள் பிடிபடுகிறார்கள்.
இலங்கைக் கடற்படைத் தாக்குதலில் மீனவர்கள் உயிர் இழப்பது மட்டுமல்ல வலை, வள்ளங்கள், படகுகள் என சொத்துக்களையும் இழக்கிறார்கள்.
கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததால் இலங்கையின் கடல் எல்லை இந்தியா நோக்கிப் பல கடல்மைல் நகர்ந்துவிட்டன. இதனால் தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடலில் மீன்பிடிக்க வரும்போது கடல் எல்லையைத் தாண்டி விடுகிறார்கள். அப்படித் தாண்டும் போது இலங்கைக் கடற்படை அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. கை, கால்களை உடைக்கிறது. வலைகளை அறுத்துப் படகுகளைச் சேதமாக்கிறது. பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசுகிறது. மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு போகிறது.
கடந்த ஆண்டு ( பெப்ரவரி 8, 2012 ) கேரள மாநிலத்தை அடுத்த ஆலப்புழா கடற்பகுதியில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது இத்தாலிய சரக்குக் கப்பல் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கொல்லத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் தமிழகம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை கடற்கொள்ளையர் என நினைத்து தவறாக சுட்டுவிட்டதாக இத்தாலிய சரக்குக் கப்பலில் வந்தவர்கள் கூறினார்கள்.
இதனை அடுத்து இந்திய கடலோர காவல்படையினர் இத்தாலிய சரக்குக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதின் எதிரொலியாக கேரளா அரசு தமிழ்நாட்டு அரசைப் போல் கடிதம் மட்டுமே எழுதாமல் உடனே செயலில் இறங்கி இத்தாலியர்கள் இருவரையும் கைது செய்தது. விசாரணையின் பின்னர் திருவனந்தபுரம் சிறைச்சாலையில் சந்தேக நபர்கள் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் 578 பேரைச் சுட்ட சிறீலங்கா கடற்படையினரில் ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை. ஒருமுறை சிறீலங்கா கடற்பரை தமிழக மண்ணில் இறங்கி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போதும் யாரும் கைது செய்யப்படவில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கதைதான்.
கச்சதீவுச் சிக்கலின் அடிப்படை என்ன?
நெடுந்தீவுக்கு தெற்கே 9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 12 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு நீரணையில் கச்சதீவு அமைந்துள்ளது. தீவின் பரப்பளவு 285 ஏக்கர். கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரைமைல் தூரமும் கொண்டதாக இருந்தாலும் அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் நிறைந்ததாக உள்ளது. ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலர வைப்பதற்கும் பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும் மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவைப் பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோனியாரது கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.
20 ஆம் நூற்றாண்டில், இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர், அங்கு அந்தோனியார் தேவாலயத்தைக் கட்டினார். இன்றும், அத்தீவில் இருக்கும் ஒரே கட்டடம் அதுதான். இராமேஸ்வரமும் அதை ஒட்டிய கடல் பகுதியும் சிறு தீவுகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு வரை, ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகப் பகுதியாக இல்லாமல், சேதுபதி மன்னர்கள் ஆண்டு வந்த இராமநாதபுரம் சமஸ்தானத்திடமே இருந்தன. சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவிலிருந்த மற்ற சமஸ்தானங்களைப் போல் இராமநாதபுரம் சமஸ்தானம் சட்ட பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. கச்சதீவு இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் பரம்பரைச் சொத்து என்பதை எண்பிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன. அவை மதுரையிலுள்ள ஆவண காப்பகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மன்னருக்கும் அன்றைய இந்திய (மத்திய) அரசின் உள்துறை செயலருக்கும் இடையே, 1913 இல் குத்தகை ஆவணம் ஒன்று கையெழுத்தாகியது. அந்த ஆவணத்தின் இறுதியில் சமஸ்தானத்தில் சங்கு கிடைக்கும் பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில், கச்சதீவின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் சொத்தாக, கச்சதீவு இருந்தது என்பதும் அதை ஆங்கிலேய அரசு அங்கீகரித்துள்ளது என்பதும் தெளிவாக எண்பிக்கப்பட்டுள்ளது. ஒக்தோபர் 21, 1921 இல் இலங்கைத் தலைநகராகிய கொழும்பில், மீன் பிடி எல்லையை வகுக்க மாநாடு ஒன்று நடந்தது. இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட, ஹார்ஸ்பர்க் என்ற அதிகாரி, கச்சதீவுக்கு அப்பால் 3.45 மைல் (3 கடல் மைல்) வரை, மேற்கே உள்ள கடல் பகுதியும் உள்ளடங்கும் வகையில் இலங்கையின் எல்லை வகுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார்.
இந்திய அரசுக் குழுவினர், கச்சதீவு தமக்குச் சொந்தம் என்று இராமநாதபுரம் மன்னர் கூறுவதை மெய்ப்பிக்க வரைபடத்தையும் காட்டினர். நெருக்கடியைத் தவிர்க்க, இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை, கச்சதீவுக்கு மேற்கே, 3.45 மைல் தொலைவிலேயே தற்காலிகமாக வரையறுத்துக் கொள்ளலாம் என உடன்பாடு செய்து, இந்திய குழு அறிக்கை ஒன்றை இந்திய அரசுக்கு அனுப்பியது. பழைய ஆவண விவரங்களையும் ஆங்கில அரசின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, ஆங்கிலேயர் ஒரு போதும் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்பதும் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
1972 இல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி அதற்கு முன் இராஜா இராமராவ் வெளியிட்ட இராமநாதபுர மாவட்ட கையேடு 1915, 1929 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு 1899 இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை இராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் இராமேசுவரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் கச்சதீவு இருக்கிறது என்றும் ஜமீன் ஒழிப்புக்கு முன்னர் இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும் இந்தத் தீவின் நிலவளவு எண் 1250 பரப்பளவு 285.20 ஏக்கர் (3.75 சதுர மைல்) என்றும் இந்தத் தீவு இராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சதீவை அது குறிக்கிறது.
1956 க்குப் பின், இந்திய அரசு தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கிமீ) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்புகளை, இலங்கை அரசும் வெளியிட, சிக்கல் வலுவடைந்தது.கடந்த, 1973 இல், அன்றைய பிரதமர் இந்திரா, இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974 இல், இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா, இந்தியா வந்தார். அண்டை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை ஒரு வகையில் நமக்கு சொந்தமான கச்சதீவு கைமாறக் காரணமாக இருந்தது. 1974 இல், இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் 5 ஆவது விதி இந்திய தமிழக மீனவர்கள், கச்சதீவு பகுதியில் மீன் பிடிக்கவும் கச்சதீவில் ஓய்வெடுக்கவும் மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும் வழி வகுத்திருந்தது. முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது (2008) அதிமுக பொதுச் செயலர் என்ற முறையில் கச்சதீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் 2013 இல், அதேபோல் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்குகளின் பிழிவு இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்தது தவறு என்பது தான். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இல்லாது செய்வதற்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை மீட்டெடுக்கவும் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
உச்ச நீதிமன்றம் 1960 மார்ச், 14 ஆம் நாள் தனது தீர்ப்பை வெளியிட்டது.
இந்தியா, 1947 இல் சுதந்திரம் அடைந்த போது மேற்கு வங்க மாநிலம் இந்தியாவுடன் இருக்க, கிழக்கு வங்க மாநிலம் கிழக்கு பாகிஸ்தானாக மாறியது. பின், இந்தக் கிழக்கு பாகிஸ்தான் வங்க தேசமாகத் தனி நாடானது.”பேர்பாரி’ என்ற நிலப்பரப்பு சம்பந்தமாக, இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே தொடக்க முதல் தகராறு இருந்து வந்தது. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு 1950 களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போது அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த உடன்படிக்கையின் விதிகளை ஆய்வுசெய்த நீதிமன்றம், அந்த உடன்படிக்கை இந்தியாவின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கையே என்று முடிவு செய்தது. இப்படி ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க, அரசுக்கு உரிமை உள்ளதா என்று ஆராய்ந்த போது, இவ்வாறு விட்டுக் கொடுப்பதற்கு தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்ய வேண்டும் என்றும் அவ்விதம் செய்யாத பட்சத்தில், இந்தியாவின் நிலப்பகுதிகளை வேறு நாட்டோடு உடன்படிக்கை செய்து, அதை விட்டுக் கொடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதன்படி, பேர்பாரி நிலப்பரப்பு முழுவதும் இந்தியாவுடன் இணைந்தது.
மேற்கு வங்க அரசின் அன்றைய முதல்வர் பி.சி. ராய் அவர்களின் துணிச்சலான நடவடிக்கை காரணமாகப் பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விண்ணப்பம் செய்திருந்தால் கச்சதீவை மீட்டிருக்கலாம். ஆனால் அன்றைய முதல்வர் கருணாநிதி அதனைச் செய்யவில்லை.
உச்ச நீதிமன்ற, எட்டு நீதிபதிகள் கூடி வழங்கிய இந்தத் தீர்ப்பு வந்து (1960) 14 ஆண்டுகள் கழித்து கச்சதீவு உடன்படிக்கை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எழுதப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது போலவே, கச்சதீவு உடன்படிக்கையும் பின்னேற்பு செய்யப்பட வேண்டும் என்று கச்சதீவு ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், கச்சதீவு உடன்படிக்கை தொடர்பாக, அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு திருத்தமும் இன்று வரை செய்யப்படவில்லை. எந்தத் திருத்தமும் செய்யப்படாத நிலையில், இந்தியா – இலங்கையோடு 1974, 1976 இல் செய்து கொண்ட உடன்படிக்கைகள் சட்டபூர்வமானதல்ல. இப்போது, மத்திய அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது தான் கேள்வி. இனப்படுகொலை நடத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு ஆட்சித்தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய அரசு, போர்க்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட மகிந்த இராசபக்சேயைத் தட்டிக் கேட்காத மத்திய அரசு, கச்சதீவு சிக்கலை முடிந்து போன விவகாரம் என்று இலங்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் பதில் சத்தியபிரமாணம் செய்யுமா அல்லது உச்ச நீதிமன்றத்து எட்டு நீதிபதிகள் வழங்கிய வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பை ஒப்புக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment