dinamani
இலங்கை அரசியல் சட்ட 13-ஆவது திருத்தத்தை சில மாற்றங்களுக்கு உட்படுத்தும் வேலைகள் இலங்கையில் மிகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
1987-இல் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையொப்பமிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக அமல்படுத்த வேண்டிய 13-ஆவது சட்டத்திருத்தத்தை கடந்த கால் நூற்றாண்டாக இலங்கை அரசு அமல்படுத்தவே இல்லை. தற்போது அதன் ஷரத்துகளை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

இம்மாதம் 18-ஆம் தேதி, இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதுதில்லியில் பிரதமர் மன்மோகனைச் சந்தித்து, 13-ஆவது சட்டத்திருத்தம் நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று கோரியபோது, பிரதமர் தெரிவித்த கருத்து, “”இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டுவிட மாட்டோம், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்பதுதான்.
இந்திய அரசு, இது தொடர்பாக இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதம் வழக்கமான, எந்தவிதமான தாக்கத்தையும் அல்லது நிர்பந்தத்தையும் இலங்கை அரசுக்கு ஏற்படுத்தப்போவதில்லை.
சில தினங்களுக்கு முன்பு 13-ஆவது சட்டத்திருத்தத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை செய்ய நாடாளுமன்ற தேர்வுக்குழு அமைத்தார்கள். இதில் தமிழ்த் தேசிய கூட்டணி உள்பட பல கட்சிகள் உறுப்பினர்களாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டன. தற்போது (ஜூன் 26-ஆம் தேதி), 13-ஆவது சட்டத்திருத்தத்தில் உட்பிரிவுகள் திருத்தம் குறித்த கருத்துரு இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு வேண்டுமென்றே இவ்வாறு நீதிமன்றத்தையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறது என்று கருத இடமிருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டின்போது, 13-ஆவது சட்டத்திருத்தத்தை இந்தியா வலியுறுத்தினால், “‘அது நீதிமன்றத்தின் கருத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது” என்று சாக்குப்போக்கு சொல்ல வசதியாக இத்தகைய நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியிருக்கக்கூடும்.
மேலும், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தாலும் சிறுபான்மை முஸ்லிம்களில் பலரும் உயர்கல்வி பெற்றவர்களாகவும், அரசியல் அறிவு கொண்டவர்களாகவும் வளர்ந்து நிற்பதை சிங்களர்கள் புதிய பிரச்னையாகக் கருதுகிறார்கள். இந்நிலையில், தமிழக முஸ்லிம் அமைப்புகளை இலங்கைத் தமிழ் எம்பி-க்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பதும், “நாம் தமிழர் கட்சி’ மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதும் இலங்கை அரசுக்கு அச்சத்தைத் தந்துள்ளது.
தமிழர்கள், முஸ்லிம்கள் என, எந்தச் சிறுபான்மையினருக்கும் மாகாண அளவில் முழுஅதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, 13-ஆவது சட்டத்திருத்தத்தில் உட்பிரிவுகள் மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இவை எதுவாக இருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறுகின்ற செயலாகத்தான் இது இருக்கும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் உட்பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இந்தியாவின் ஒப்புதல் பெறாமல் இத்தகைய திருத்தம் செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆனால் இலங்கை அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
13-ஆவது சட்டத்திருத்தத்தில், மாகாண இணைப்பு அல்லது உருவாக்கம் அங்கு வாழும் மக்கள் கருத்தின்படி அமைய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது தொடர்பாக மாகாண ஆளுநருக்கு அளிக்கப்படும் அதிகாரத்தைக் குறைத்து இந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரம் அதிபரின் அதிகாரத்துக்கே உள்ளதாக உட்பிரிவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதை இலங்கைத் தமிழர் அமைப்புகள் கண்டிக்கின்றன. இது சிறுபான்மையினராக உள்ள தமிழர்களை மேலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என்கிறார்கள்.
ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தன கையெழுத்திட்ட 13-ஆவது சட்டத்திருத்தமே ஒரு கேலிக்கூத்து என்று சில தமிழர் அமைப்புகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மாகாணத்தின் முதல்வர், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தாலும், மாகாண ஆளுநர் சிங்களராக நியமிக்கப்பட்டால், அவர் அரசின் முடிவுகளுக்கு அனுமதி அளிக்கமாட்டார். மேலும், மாகாண அமைச்சரவையைக் கலைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இருக்கிறது என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கையெழுத்தான நேரத்திலேயே நீர்த்துக்கிடந்த 13-ஆவது சட்டத்திருத்தத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்ய இலங்கை அரசு துடிக்கின்றது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மீறி, 13-ஆவது சட்டத் திருத்தத்தில் இலங்கை தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யுமெனில், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெருத்த அவமானம்தான் மிச்சமாகும். மற்ற நாடுகள் இந்தியாவை கிள்ளுக்கீரையாக நினைக்க வைக்கும். ஆகவே, இந்தியா இந்த விவகாரத்தில் மிகவும் கறாராகச் செயல்பட்டாக வேண்டும்.
அண்டை நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலைபுதைத்து நிற்பதுபோல இனியும் இந்தியா நிற்குமேயானால், சர்வதேச அரங்கில் நமக்கிருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விடும்.
ஆப்கானிஸ்தான் பற்றியும், மியான்மர் பற்றியும் கவலைப்படுவதை விட்டுவிட்டு, நமக்குத் தலையிட அதிகாரமுள்ள இலங்கைப் பிரச்னையில் நாம் தலையிட்டுத் தமிழர்களுக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் நியாயம் பெற்றுத் தந்தாக வேண்டும்.
- தினமணி (ஆசிரியர் தலையங்கம்)
26-06-2013
source:denamani