Saturday, June 22, 2013

புலிகளுக்கு உதவிய கேணலின் வழக்கு ஒத்திவைப்பு

gavel(34)(48)கடந்த 2009ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியின் போது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்துக்கு  உதவியளித்த குற்றச்சாட்டின் பேரில்  இராணுவத்தின் கேணல் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலத்தை படிப்பதற்காக எதிர்த்தரப்பு வழக்குரைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க, எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கினார்.

இந்நிலையில், இவ்வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேணல் ரஞ்சித் சந்திரசிறி பெரேராவுக்கு எதிரான வழக்கு, நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சாலிய பீரிஸ், ‘சற்று முன்னரே தனக்கு வழக்கு தொடுநர் பக்க சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரதிகள் தரப்பட்டன எனவும் இதனால் தனக்கு அவற்றைப் படிக்க முடியவில்லை’ எனவும் கூறினார்.
வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியமான கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஆஜரான எம்.நளீம், ‘ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனது கட்சிக்காரர் இதே விடயம் தொடர்பான இன்னொரு வழக்கில் சாட்சியாக்கப்பட்டுள்ளார் எனவும் இது சட்டநெறிக்கு எதிரானது எனவும்’ வாதிட்டார்.
இது தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வரும்படி வழக்கு தொடுநருக்கு பணித்த நீதிபதி விக்கிரமசிங்க விசாரணைக்கான திகதி ஓகஸ்ட் 22 என அறிவித்தார்.

No comments:

Post a Comment