ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, வட அயர்லாந்து,
மொன்டனிக்ரோ, மெசிடோனியா மற்றும் மொரிஷீயஸ் ஆகிய நாடுகளினால் இந்த
தீர்மானம் ஐ.நா மனிதஉரிமை பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஏற்கனவே சில வரைவு யோசனைகள் உறுப்பு நாடுகளுக்கு
இடையில் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. இந்த உத்தேச வரைவுத் திட்ட
யோசனைகளில் திருத்தம் செய்யப்பட்டு, இறுதியாக புதிய யோசனையொன்று
முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் இந்த வாரத்தில்
வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.உத்தியோகபூர்வமாக இந்த தீர்மானம் பேரவை
அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, உறுப்பு நாடுகளிடையே நேற்றைய
தினம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைவான வகையில் யுத்தகாலத்தில் இரு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பாக இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. ஜெனீவா நேரப்படி முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்க பிரதிநிதிகளால் தமது சார்பு கருத்துக்களை முன்வைக்கப்படும்.
No comments:
Post a Comment