Tuesday, April 08, 2014

ஜெனிவா வாக்கெடுப்புக்கு முதல் நாள் பீரிசுடன் தொலைபேசியில் பேசிய சல்மான் குர்ஷித்


சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்முடன் தொலைபேசியில் உரையாடியதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில், நடந்த உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் சிறிலங்கா அதிபர் பங்கேற்ற கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ஜெனிவாவில் தீர்மானம் கடந்த மாதம் 27ம் நாள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதற்கு முதல் நாள், இந்திய வெளிவிவகார அமைச்சர் தம்மை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக, பீரிஸ் கூறியுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்த முறை இந்தியா வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் மட்டத்திலேயே முடிவெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தன்னிடம் கூறியதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியாவினது முடிவு என்ன என்பதை அவர் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சல்மான் குர்ஷித் கூறியது போலவே, அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டிருந்தால், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் இது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று எவ்வாறு குறிப்பிட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் தலைமையின் அனுமதியின்றி எந்தவொரு அதிகாரியும் வெளிவிவகாரக் கொள்கையின் மீது முடிவெடுப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment