Tuesday, April 08, 2014

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்காது – தெளிவான முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்கிறார் பீரிஸ்

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், முன்னெடுக்கப்படும் போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தில், பேசிய அவர்,

சிறிலங்கா அரசாங்கம், ஐ.நாவுடனும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு போன்ற ஏனைய அனைத்துலக முகவரமைப்புகளுடனும், இணைந்து பணியாற்ற உறுதி கொண்டுள்ளது.


ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், முன்னெடுக்கப்படும் போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்காது.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் விசாரணை மேற்கொள்வதற்கான சட்ட அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பொறிமுறைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பது பற்றிய கேள்வியே எழவில்லை.

மூன்று காரணங்களுக்காக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருடன் ஒத்துழைப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள விசாரணை நவநீதம்பிள்ளையின் பணியகத்துக்கு அப்பாற்பட்டது.

அவர், சிறிலங்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருபவர்.

சிறிலங்காவில் ஐ.நா தலையீட்டை வலியுறுத்திய அவர், திறந்த மனதுடன் விசாரணையை அணுகமாட்டார்.

பயங்கரவாரதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக கூறியதன் மூலம், சிறிலங்காவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று வெளிப்படுத்த முயன்றவர் நவநீதம்பிள்ளை.

போர் முடிவுக்கு வந்த ஒரு வாரத்தில், சிறிலங்கா அரசுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்.

எவ்வாறு அவரால் அப்படிக் கோர முடியும்?

அவர் பக்கச்சார்பானவர் என்பதற்கு இவையே போதுமானவை.

முன்மொழியப்பட்டுள்ள விசாரணைப் பொறிமுறைக்கான நிதி தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கம் கவலை கொள்கிறது.

பெருமளவு நிதியை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு வழங்கும் நாடுகள் தான் ஐ.நா தலையீட்டைக் கோருகின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கான இந்த நிதி உதவி குறித்து பல நாடுகள் கவலை கொண்டுள்ளன.

விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவு தேவை. ஆனால் அதனை நாம் வழங்கமாட்டோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் இங்கு வரமுடியாது.

எனினும். எந்த விசாரணைக்கும் எவரேனும் சாட்சிங்களை அளிப்பதை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்யாது.

வெவ்வேறு மக்களிடம் வெவ்வேறு பார்வைகள் இருக்கலாம்.

தமக்கு என்ன தேவை என்று அவர்கள் எமக்கு கூற வேண்டியிருக்கும்.

ஆனால், விசாரணைக்கு நாம் ஒத்துழைப்பதில்லை என்று தெளிவான கொள்கை முடிவை எடுத்திருக்கிறோம்.

நாம் விசாரணைக் குழுவுக்கு சட்ட அதிகாரத்தை வழங்கப் போவதில்லை.

ஐ.நா இந்த விசாரணையை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறது என்று தெளிவாக இல்லை.

ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகித்தது பேச்சுக்கான சூழலை வலுப்படுத்தியுள்ளது.

இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தால், பேச்சுக்கள் கடினமானதாகியிருக்கும்.

இந்தியாவினது நடுநிலை நிச்சயம் உதவிகரமானது. நாம் அதனை மதிக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.source:Pthinampalkai

No comments:

Post a Comment