Thursday, April 10, 2014

தனி உளவு அமைப்பு ஒன்றை (Research and Analysis Wing) 1968-இல் உருவாக்கிக் கொண்டது_RAW

இந்தியா விடுதலை அடையும் முன், 1933-இல் உருவாக்கப்பட்டது ஐ.பி. எனும் உளவு அமைப்பு. விடுதலைக்குப் பின் 1962-இல் நடந்த சீனப் படையெடுப்பிலும் 1965-இல் நடந்த பாகிஸ்தான் போரிலும் முறையான உளவுப் பிரிவு இல்லாமல் போனதால் அதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது. வெளிநாட்டு விவரங்களைத் தெரிந்துகொண்டு செயற்படத் தனி உளவு அமைப்பு ஒன்றை (Research and Analysis Wing) 1968-இல் உருவாக்கிக் கொண்டது.
உலக நாடுகளின் அரசியல் நிலைக்கேற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் உள்நாட்டுத் தீவிர வாதத்தைத் தடுக்கவும் இராணுவ நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் "ரா' செயற்படத் தொடங்கியது. இந்தியப் பிரதமரிடம் மட்டுமே நேரில் தொடர்புகொண்டு விவாதிக்கும் அதிகாரம் பெற்றது. இந்திய நாடாளுமன்றத்திற்குக் கூடப் பதிலளிக்கும் அவசியம் அற்றது. தகவல் அறியும் உரிமையில் விதி விலக்கு என்று "ரா' அமைப்புக்கு ஏகப்பட்ட தனிச் சலுகைகள்.

"ரா' கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள அமைப்பு. இப் பணியில் அமர்த்தப்படுபவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணி அமைப்பு, உள்ளூர் காவல் நிலையம், உள்ளூர் புலனாய்வுப்பிரிவு ஆகிய மூன்று நிலைகளில் விசாரிக்கப்பட்ட பிறகே பணியமர்த்தம் செய்யப்படுவார்கள்.
வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவர், திவான் சந்த் மாலிக் எனும் பெயரில் இந்தியக் குடிமகன் என்று பொய் சொல்லி, "ரா' அமைப்பில் 1999-இல் சேர்ந்திருக்கிறார். 2005 வரை ஆறாண்டுக் காலம் இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் இருந்திருக்கிறார். சந்தேகப்பட்டு நடவடிக்கை தொடங்கும் முன் முக்கியமான தகவல்களோடு தலைமறைவாகியிருக்கிறார். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.
கே.வி.உண்ணிகிருஷ்ணன் கதை வேறு. தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கே.வி. உண்ணிகிருஷ்ணன் விமானப் பணிப்பெண்ணின் காதலில் விழுந்தார். விமானப் பணிப்பெண்ணோ அமெரிக்க உளவாளி. அவர் வழியாக இந்தியாவுக்குத் துரோகம் செய்தார். உளவுப் பிரிவில் பணிபுரிகிறவர்களை உளவு பார்ப்பதற்கென்றே உள்ள இன்னொரு உளவுப் பிரிவு இதைக் கண்டு பிடித்தது. கே.வி. உண்ணிகிருஷ்ணன் திகார் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார். இந்தியக் காவல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இப்படி உலகம் முழுதும் தாய் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் பணியாற்ற, சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் சிலர், இன்னொரு நாட்டுக்குத் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஈர்ன்க்ஷப்ங் அஞ்ங்ய்ற் என்று சொல்கிறார்கள். இவர்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம்?
Double Agent என்ற சொல்லுக்கு வாசகர்கள் பின் வருமாறு தெரிவித்துள்ளனர் :

செ.நாராயணசாமி - இருதலை ஒற்றர்
முனைவர் க.அன்பழகன் - இருமுக ஒற்றர்
செல்வம் ரத்தினசாமி - இரட்டை உளவாளி
வெ.ஆனந்தகிருஷ்ணன் - போலி தூதன்
டி.வி.கிருஷ்ணசாமி - இருபக்க வித்தகர்
கோ. மன்றவாணன் - இருபுற முகவர்
என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, இரா.பொ.வீரையன் - இரட்டை ஒற்றர்
கா.மு சிதம்பரம் - முடத்தெங்கு ஒற்றன்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - இருமை உளவாளி
மேற்கூறப்பட்டுள்ள சொற்களில் "டபுள் ஏஜெண்ட்' என்பவரின் வஞ்சனை கலந்த துரோகம் வெளிப்படவில்லை. தமிழ் வழக்கில் துரோகம் வேறு, இரண்டகம் வேறு. உண்ட வீட்டிற்குச் செய்யும் துரோகம், இரண்டகம் என்று கருதப்படும். அதனால்தான் "உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே' என்று சொல்கிறார்கள். டபுள் ஏஜெண்ட், தாய் நாட்டிற்குச் செய்யும் துரோகம், இரண்டகமாகும். எனவே, அவர்களை இரண்டக உளவாளி என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
Double Agent - இரண்டக உளவாளி
First Published : 06 April 2014 01:14 AM IST 
source:denamani

No comments:

Post a Comment