Thursday, April 10, 2014

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 875 பேர் போட்டியிடுகின்றனர்

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 875 பேர் போட்டியிடுகின்றனர். இந்த மாதம் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேர், புதுச்சேரியில் 19 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 30 பேர் என மொத்தம் 875 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் 789 பேர் ஆண்கள். 55 பேர் பெண்கள். இதர பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர். அதிகபட்சமாக தென் சென்னை மக்களவைத் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

61 சுயேச்சைகள் வாபஸ்: பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெறவில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் 61 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்த 2009-ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 823 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 571 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் 3 சுயேச்சைகள் வாபஸ்: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை புதன்கிழமை (ஏப்ரல் 9) வாபஸ் பெற்றனர். இதையடுத்து புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 30 பேர் களத்தில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான 6 கட்சி கூட்டணி நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்து வந்த இடதுசாரிக் கட்சிகளும் தனித்தே களத்தில் இறங்கியுள்ளது. மேலும் ஊழல் எதிர்ப்பு கோஷத்தை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களும் முதன் முறையாக களத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் வைகோ, தயாநிதி மாறன், இல.கணேசன், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன், எல்.கே.சுதீஷ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பிரதான கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களில் முக்கியமானவர்கள். வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு மொத்தமுள்ள 906 வேட்பாளர்களில் 61 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின், புதன்கிழமை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டார். அதன்படி, தமிழக மக்களவைத் தேர்தலில், தேர்தல் களத்தில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 845 ஆகும். அவர்களில், 789 பேர் ஆண்கள். 55 பேர் பெண்கள். இதர பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என அவர் தெரிவித்தார்.
எந்தெந்த தொகுதிகளில் எத்தனை பேர்? மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது தென் சென்னை. அந்தத் தொகுதியில் 42 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக, தனித்தொகுதியான நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி (தனி) தொகுதியில் மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தென் சென்னையில் 42 பேருடன், வடசென்னை தேர்தல் களத்தில் 40 பேரும், மத்திய சென்னை தொகுதியில் 20 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள்: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்குச் சாவடி சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்படும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர் எண்ணிக்கை
திருவள்ளூர் (தனி) 14
வட சென்னை 40
தென் சென்னை 42
மத்திய சென்னை 20
ஸ்ரீபெரும்புதூர் 21
காஞ்சிபுரம் (தனி) 11
அரக்கோணம் 27
வேலூர் 24
கிருஷ்ணகிரி 15
தருமபுரி 15
திருவண்ணாமலை 24
ஆரணி 19
விழுப்புரம் (தனி) 20
கள்ளக்குறிச்சி 22
சேலம் 25
நாமக்கல் 26
ஈரோடு 14
திருப்பூர் 26
நீலகிரி (தனி) 10
கோவை 25
பொள்ளாச்சி 18
திண்டுக்கல் 18
கரூர் 25
திருச்சி 29
பெரம்பலூர் 21
கடலூர் 17
சிதம்பரம் (தனி) 15
மயிலாடுதுறை 19
நாகப்பட்டினம் (தனி) 9
தஞ்சாவூர் 12
சிவகங்கை 27
மதுரை 31
தேனி 23
விருதுநகர் 26
ராமநாதபுரம் 31
தூத்துக்குடி 14
தென்காசி (தனி) 18
திருநெல்வேலி 27
கன்னியாகுமரி 25
புதுச்சேரி 30
மொத்தம் 875 பேர்
source:Denamani

No comments:

Post a Comment