
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ள ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நிபுணர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளமையை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியன வரவேற்றுள்ளன.
இலங்கையில் உண்மையைக் கண்டறியவும், நல்லிணக் கத்தை ஏற்படுத்தவும் இத்தகைய பொறிமுறைகளே உதவும் என்றும் அவை தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்துத் தெரி வித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப்
பேச்சாளர் மாரி ஹார்ப், "நல்லாட்சி மனித உரிமை விவகாரம், நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காத்திரமானதும் ஸ்திரமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா. விசாரணைக்குக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும். விசாரணைக்கான ஆலோசனைக்குழுவில் திறமையான மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது வரவேற்கத்தக்க விடயம்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹுஜ் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கையில் நடந்தவற்றைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நாவின் 25 ஆவது அமர்வில் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு பிரிட்டனும் முக்கிய பங்காற்றியிருந்தது.
விசாரணை மேற்கொள்வதற்கு மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்தமையை வரவேற்கின்றோம். இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு இந்த விசாரணை உதவும். இலங்கை அரசு இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்'' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment