By
கொ.ஜெ. ஆனந்த்
First Published : 28 June 2014 01:49 AM IST
கர்நாடக நீர்ப்பாசனத்துறை சார்பிலான விளம்பரங்களை
செய்தித்தாள்களில் வெளியிடுவதை அரசு நிறுத்த வேண்டும். இதுபோன்ற
விளம்பரங்களை அண்டை மாநில அரசுகள் கூர்ந்து கவனிக்கும். இது மாநில அரசுக்கு
சில நேரங்களில் பாதகமாக அமையும்' என்று அம்மாநில முதல்வர்
சித்தராமையாவுக்கு யோசனை தெரிவித்து இருப்பவர் அம்மாநில எம்எல்ஏவோ,
அமைச்சரோ அல்ல; நாட்டின் 12ஆவது பிரதமராக பதவி வகித்துவிட்டு, உள்ளூர்
அரசியலுக்கு திரும்பியிருக்கும் தேவெகௌடாதான்.தனது மகன் குமாரசாமியை எப்படியாவது முதல்வராக்கிவிட வேண்டும் என்றெண்ணத்தில் மாநில அரசியலில் ஈடுபட்டு வரும் அவர், தான் பிரதமராக பதவி வகித்தவர் என்பதையும் மறந்து இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார்.
பிரதமராக பதவி வகிக்காதபோது மாநில நலனுக்காக இப்படி பேசுபவர் பிரதமராக இருந்தபோது, கர்நாடக நலனுக்காக என்னவெல்லாம் செய்து இருப்பார் என்று பொதுமக்கள் யோசிக்கும் விதமாக உள்ளது அவர் பேச்சு.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகள் கழித்தே, அதுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அதுகுறித்து நடுவண் அரசிதழில் கடந்த ஆண்டு தீர்ப்பு வெளியானது. இது வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகியும் காவிரி மேலாண்மை வாரியத்தையோ, முறைப்படுத்தும் குழுவையோ அமைக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வரவில்லை. ஆட்சிக்காலமும் முடிந்துவிட்டது. புதிய பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து, கோரிக்கை மனுவும், கடிதமும் எழுதியுள்ள நிலையில், "இதுபோன்ற நடவடிக்கைகளை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். அவசியமில்லாமல் காவிரி பிரச்னையை எழுப்பி வருகிறார்' என்று கர்நாடக அரசியல்வாதிகள் பேசிவருவது தமிழக விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் செயலாகும்.
அம்மாநில முதல்வர் சித்தராமையா, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு விதண்டவாத அரசியல் நடத்துவதாகவும், இதற்கு கர்நாடக அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் கூறியுள்ளார். மாநில முதல்வர் அப்படிதான் பேசுவார் என்று நாம் எண்ணியிருந்த வேளையில், அம்மாநிலத்திலிருந்து பா.ஜ.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டு, நடுவண் அரசில் அமைச்சர்களாகி இருக்கும் அனந்தகுமார், சதானந்த கௌடா ஆகியோர் ஒருபடி மேலே போய் "கர்நாடக மாநிலத்துக்கு எதிரான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று கூறி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
பிரதமர், மத்திய அமைச்சர் என்போர் நாடு முழுமைக்குமான பொறுப்புக்குரியவர்கள். அவர்கள் பொறுப்பேற்கும்போது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்களின் நலனுக்காக செயல்படுவேன் என்று உறுதிமொழி ஏற்கின்றனர். ஆனால், அவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் போல பேசி வருவது அவர்கள் வகித்த, வகிக்கும் பொறுப்புகளுக்கு அழகல்ல. அரசியலமைப்பின்படி நாம் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.
நாடு என்பது கர்நாடகம் மட்டும் அல்ல; இந்தியா முழுமையும்தான் என்பதை மத்திய அரசின் பொறுப்புகளில் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களுக்கு நாம் உரிய முக்கியத்துவம் தராததால், அங்கு தீவிரவாத குழுக்கள் உருவாகி அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதற்கான முடிவுகளை துணிந்து செயல்படுத்த வேண்டும்.
காவிரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகம் முறையாக தண்ணீர் விடாததால், டெல்டா விவசாயிகள் பெரும் இழப்புக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களின் நலனை புறந்தள்ளி, தமிழகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்தாலே போதுமானது. ஆனால் அந்த நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
ஈழத்தில் தமிழர்களை அழித்தொழிக்க முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி உதவியது என்று தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்ததால்தான் அக்கட்சி இங்கு பெரும் தோல்வியை சந்தித்தது. அதுபோல, காவிரி பிரச்னையில் மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சிக்குமேயானால் அதற்கான விலையை அக்கட்சி கொடுக்க வேண்டி இருக்கும்.
"இருவரும் சேர்ந்தே செல்வோம்; சேர்ந்தே வளர்வோம்' என்ற கூட்டாட்சி தத்துவத்தை 68ஆவது சுதந்திர தின எழுச்சிமிகு வாசகமாக அறிவித்துள்ள மோடி அரசு, காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு நியாயம் வழங்கும் என்று நம்புவோம்!
No comments:
Post a Comment