Friday, June 20, 2014

ஐ.நா. விசாரணை குழுவை அனுமதிக்க முடியாது: இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்

 இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை குழுவை அனுமதிக்க முடியாது என இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  அந்நாட்டு ராணுவம் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த 12 பேர் கொண்ட குழுவை ஐ,நா மனித உரிமை கவுன்சில் அமைத்துள்ளது. இக்குழு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க இலங்கை நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டுமென ராஜபக்சே கூறினார். இந்நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சில் குழு இலங்கை வந்து விசாரணை நடத்த அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்க இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது.


இதில், ஐ.நா. விசாரணை குழுவை அனுமதிப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதால், அதை அனுமதிக்க முடியாது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதத்திற்கு பின், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் எதிராக வாக்களித்தனர். 37 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதன்படி, தீர்மானம் நிறைவேறியது. ஐ.நா. மனித உரிமை குழு விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க இந்த தீர்மானத்தின் மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளது இலங்கை அரசு. source Nakkiran

No comments:

Post a Comment