சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை ஐ.நாவில் இந்தியா கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முதல்முறையாக சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, சுமார் 50 நிமிடங்கள் வரை பேச்சு நடத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், ஏனைய விவகாரங்கள் குறித்தும் அவர் நரேந்திர மோடியுடன் பேசியதுடன், 66 பக்கங்கள் அடங்கிய மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
இந்த மனுவில், சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை, ஐ.நாவில் இந்தியா கொண்டு வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்கவும், இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும், இந்தியா உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் கோரியுள்ளார்.
மேலும், தமிழர்களுக்குத் தனிநாடு ஒன்று அமைய வேண்டுமா என்பது குறித்து இலங்கையில் உள்ள தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரியுள்ளார்.
மேலும் கச்சதீவு விவகாரம், தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரி நீர் பங்கீடு, தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தியப் பிரதமருடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.


No comments:
Post a Comment