Monday, July 07, 2014

எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட ரூ.40 கோடி லஞ்சமாக கேட்ட பிரதமரின் மகன்

சட்டமன்ற மேலவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு 40 கோடி ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று அப்பதவிக்கு போட்டியிட விரும்பிய நபரிடம் கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி பேரம் பேசிய ஆடியோ ‘சி.டி.’ ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்பும் வகையில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக சமீபத்தில் மேலவை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அம்மாநில சட்டசபை உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்கள் வாக்களித்தால், அக்கட்சியின் சார்பில் ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்ததால் எம்.எல்.சி.யாகும் முயற்சியில் பலர் கட்சியின் மாநில தலைமையை அணுகினர்.


அவ்வகையில், வடக்கு கர்நாடகா பகுதியைச் சேர்ந்த விஜு கவுடா பாட்டீல் என்பவருக்கு 'சீட்' வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும், அம்மாநில மதசார்பற்ற ஜனதா தளம் முன்னாள் தலைவருமான குமாரசாமியை தொடர்பு கொண்டனர்.

அவர்களுடன் குமாரசாமி பேசியதை ரகசியமாக பதிவு செய்த விஜு கவுடா பாட்டீலின் ஆதரவாளர்கள் தற்போது அதை 'சி.டி.’யாக தயாரித்து ஊடகங்களில் கசிய விட்டுள்ளனர்.

'எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டளிக்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பணம் கேட்கின்றனர். ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டினை பெறுவதற்கு 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த கணக்கை வைத்து பார்க்கும் போது, உங்கள் விஜு கவுடாவை எம்.எல்.சி.யாக்க 40 கோடி ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும்' என்று குமாரசாமி பிடிவாதமாக பேசும் குரல் அந்த ‘சி.டி.’யில் பதிவாகியுள்ளது.

விஜு கவுடா பாட்டீலின் ஆதரவாளர்கள், ‘40 கோடி ரூபாய் எல்லாம் தர முடியாது’ என்று கூறிய போது, 'குறைந்தபட்சம், 20 கோடி ரூபாயாவது கொடுங்கள்.அந்த தொகையுடன் நான் ஒரு 10 கோடி ரூபாய் சேர்த்து போட்டு, எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்து விடுகிறேன்' என்று குமாரசாமி கூறியுள்ளார்.

மேலும், கடந்த, 2012-ல் நடைபெற்ற மேலவை தேர்தலின் போது தனது கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் வேட்பாளர் பைரதி சுரேஷ் என்பவரிடம் தலா ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு, அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த உண்மையையும் இந்த உரையாடலின் போது குமாரசாமி போட்டு உடைத்துள்ளார்.

இந்த ‘சி.டி’ பதிவு கர்நாடக ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பாகி வரும் நிலையில், ‘எங்களது உள்கட்சி நிலவரத்தை தொண்டர்களுடன் மனம் விட்டு பகிர்ந்துக் கொண்டேன். என்னிடம் யாரும் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நான் ஏதோ பெரிய பாவத்தை செய்து விட்டதை போல இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் ஊதி பெரிதாக்குக்கின்றன.

எதிர்கட்சியினரில் யாராவது, அரசியலில் நான் அரிச்சந்திரன் என்று கூறி நிரூபிக்க முடியுமா?’ என்று ‘கூலாக’ குமாரசாமி எதிர் கேள்வி கேட்கிறார்.

இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய சுகதார மந்திரி அனந்த் குமார் கூறியுள்ளார்.

சட்டமன்ற மேலவை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட லஞ்சம் கேட்டு பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ள குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment