Monday, July 07, 2014

பண மோசடி வழக்கு: நடிகர் பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் சரண்

பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பாலாஜி நேற்று திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் திருப்பூர் நகர வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரம்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. இதன் திருப்பூர் கிளை மேலாளராக சுரேஷ்குமார் பணியாற்றி வந்தார். பரமசிவம், பிரபு, மணிகண்டன், ராஜசேகர் ஆகியோர் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரம்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் ரூ.2 கோடியே 2 லட்சத்தை சுரேஷ்குமார் மற்றும் பரமசிவம், பிரபு, மணிகண்டன், ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் பரதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
 
விசாரணையில் சுரேஷ்குமார், பரமசிவம், பிரபு, மணிகண்டன், ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து ரூ.2 கோடியே 2 லட்சத்தை கையாடல் செய்ததும், அந்த பணத்தில் ஒரு பகுதியை திருப்பூரைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தன் என்பவரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
 
இதைத்தொடர்ந்து விஷ்ணுவர்த்தனை பிடித்து விசாரித்தபோது ரூ.20 லட்சத்தை கலை இரவு நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையை சேர்ந்த நடிகர் பாலாஜியிடம் முன்பணமாக கொடுத்ததாகவும், நிகழ்ச்சியை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாததோடு அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், விஷ்ணுவர்த்தன், பரமசிவம், பிரபு, மணிகண்டன், ராஜசேகர் ஆகிய 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விஷ்ணுவர்த்தன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் பாலாஜியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த ஏற்பாடு செய்தனர்.
 
இந்தநிலையில் நடிகர் பாலாஜி இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி அவர் நேற்று காலை திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண்.1-ல் சரணடைந்தார்.
 
நீதிபதி ராமச்சந்திரன் விசாரணை நடத்தி, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வருகிற 7 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடிகர் பாலாஜி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment