இலங்கையில்
உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு, பாதுகாப்பு அமைச்சு சுற்றறிக்கையின்
ஊடாக திங்கட்கிழமை(07) விடுக்கப்பட்டுள்ள ஞாபகமூட்டலானது ஐ.நா. நிபுணர்
குழுவுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ( என்.ஜி.ஓ) சாட்சியமளிப்பதனை
தடுக்கும் முயற்சியா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.இந்த சுற்றறிக்கையானது சட்டத்தை ஞாபகமூடும் நடவடிக்கை என்பதுடன் தங்களுடைய நிறுவனங்களை பதியும் போது, அந்நிறுவனங்கள் என்ன தூரநோக்கத்திற்காக பதிவுசெய்யப்பட்டதோ அதனடிப்படையிலேயே செயற்படவேண்டும் என்று இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சுற்றறிக்கை தொடர்பில் முன்னதாக அவர் தெளிவுபடுத்துகையில்,
ஊடகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இந்த சுற்றறிக்கையானது அரச சார்பற்ற நிறுவனங்களின் வாயை அடைக்கும் செயலல்ல.
அரச நிறுவனங்களுக்கான 1980 இன் 31 ஆம் இலக்கமுடைய சமூக சேவை ஒழுங்கமைப்புகள் (பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும்) சட்டம்.
1998 இன் 8 ஆம் இலக்கமுடைய சமூக சேவை ஒழுங்கமைப்புகள் (பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும்) (திருத்தச்) சட்டம்.
1995.10.05 ஆம் திகதிய 1161-14 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்.
1999.2.26 ஆம் திகதிய சனாதிபதி செயலாளரது சுற்றறிக்கை. இவற்றின் அடிப்படையிலேயே சமூக நிறுவனங்கள் செயற்படல்வேண்டும்.
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 1416 அரச சார்பற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. அந்நிறுவனங்களின் சேவையை மதிக்கின்றோம். இந்த சட்டத்தை மீறாமல் செயற்படுமாறே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
இதனிடையே குறுக்கிட்ட ஊடகவியலாளர், விசாரணை நடத்துவதற்கு ஐ.நா நிபுணர் குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மறுக்குமாயின் உள்நாட்டில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பெற்றுக்கொள்வோம் என்று அந்நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். அதனை தடுக்கும் நோக்கிலா இந்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, பாதுகாப்பு அமைச்சினால் ஜூலை 1 ஆம் திகதி திகதியிடப்பட்டு எனக்கு 7 ஆம் திகதி திங்கட்கிழமை கிடைத்த சுற்றறிக்கையில், செய்தியாளர்களுக்கான பயிற்சி நெறிகளையோ, அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது.
அத்துடன் ஊடக அறிக்கைகளை விடுவிக்கக்கூடாது என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் அடிப்படை நோக்கத்திற்கு அப்பால் சென்றால் தான் அது சட்டத்திற்கு முரணானதாகும் என்றார்.
No comments:
Post a Comment