Wednesday, September 24, 2014

தனிநாடு அமைக்கும் நோக்கம் கிடையாது: நீதிமன்றில் சத்தியம் செய்த த.தே.கூட்டமைப்பு !


தனி நாடு அமைக்கும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சிக்கோ கிடையாது என உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியக் கடதாசி மூலம் இது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அறிவித்துள்ளன. இலங்கை எல்லைக்குள் தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கம் கிடையாது என தெரிவித்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சத்தியக்கடதாசி மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்து ஆறு மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நிதியரசர்களான ரோஹினி மாரசிங்க, சந்திர ஏக்கநாயக்க ஆகியோர் இந்த மனுக்களை விசாரணை செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டு கோரிக்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சுய நிர்னய உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கை மீள ஒருங்கிணைத்து அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் பேசும் முஸ்லிம் மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமஸ்டி முறைமையிலான ஆட்சி முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறைமையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும், அதனை பல தடவைகள் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:[ Sep 23, 2014 02:58:35 PM | வாசித்தோர் : 5350 ]athirvu

No comments:

Post a Comment