Wednesday, September 24, 2014

இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வாய்மூல அறிக்கை இன்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்ற விசாரணையின் முன்னேற்றங்களை விளக்கும் வாய்மூல அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைன் இந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இந்த வாய்மூல அறிக்கையில், தனது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

யுத்தத்தின்போது இரண்டு தரப்பினராலும் மீறப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ள தனது அலுவலகம் முயற்சித்து வருவதாக   இளவரசர் சையத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அதற்காக தமது அலுவலகம் ஆரம்பித்துள்ள விசாரணை ஓர் முக்கிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் செயற்பட்டால் அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பெறுமதியான தகவல்களை கவனத்திற் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசாரணைகளுக்காக ஜனாதிபதியினால் ஆறு சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை, தொடர்ந்தும் தெளிவற்ற விடயமாகவே காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவெளை மனிதப் புதைக்குழிகளை அடையாளம் காண்பதற்காக நம்பக்தன்மையான நீதிமன்ற விசாரணை அவசியம் எனவும், அதற்காக சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்கின்ற அதேவேளை பங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நபர்களை முறையற்ற முறையில் கைது செய்வது மற்றும் தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சமயங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை அதிகரிக்கும் வகையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குல்கள் அதிகரிதித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment