சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
கருணாநிதி: கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
விஜயகாந்த்: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்து பதவியில் இருக்கும்போதே முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்ய வேண்டும். மாறாக ஊழலில் ஈடுபட்டால் தண்டனை நிச்சயம் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன்: பதவியில் இருக்கும்போதே மாநில முதல்வர் ஒருவருக்கு தண்டனை கிடைத்துள்ளதன் மூலம் பாஜக ஆட்சியில் சட்டம் தன் கடமையைச் சுதந்திரமாகச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. அரசியலில் தூய்மை, நேர்மை, உண்மை இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை.
பி.எஸ். ஞானதேசிகன்: தீர்ப்பின் மீது விமர்சனம் என்பது இருக்கக் கூடாது. இதற்காக வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து வன்முறையைக் கைவிட வேண்டும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ: ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி; நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம்; நீதித் துறையின் நம்பகத்தன்மையை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற தீர்ப்பு.
ராமதாஸ்: சட்டத்தையும் நீதியையும் எப்போதும் வளைத்துவிட முடியாது. நீதி இன்னும் வாழ்கிறது என்பதையே சொத்துக் குவிப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு காட்டுகிறது.
டி.ராஜா: ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவரது தலைமையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சிக்கு எவ்வித நெருக்குதலோ, பிரச்னையோ இல்லை. அதே சமயம், உடனடியாக இல்லாவிட்டாலும், நாளடைவில் இந்தத் தீர்ப்பு தேசிய, மாநில அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஜெயலலிதாவின் ஆட்சித் திறனும், தலைமைப் பண்பும் முதன்மையானது. அதை மறுக்க முடியாது. விசாரணை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக அவர் சட்ட ரீதியாக முறையிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்துடன் எல்லாம் முடிந்து விட்டதாகக் கருதி அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக் கூடாது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்பதை உணர வேண்டும்.
தா.பாண்டியன்: இந்தத் தீர்ப்பால் தமிழக அரசியலில் ஏற்படப் போகிற விளைவுகளை நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தீர்ப்புக்கு எந்த உள்நோக்கமும் கற்பிக்க விரும்பவில்லை.
ஜி. ராமகிருஷ்ணன்: பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியைப் பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்ய வேண்டும்.
பழ. நெடுமாறன்: முதல்வருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய தீர்ப்பு இதுவரை இந்திய வரலாற்றிலேயே அளிக்கப்படாதது, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி.
பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையைக் கண்டிக்கிறேன்.
2 ஜி ஊழல் வழக்கு போன்ற வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்பு வரும்போதுதான் ஊழல் அரசியல்வாதிகளைப் பொது வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த முடியும்.
சரத்குமார்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. தமிழக மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சட்ட நடவடிக்கைகளின் மூலம் மேல்முறையீடு செய்து ஜெயலலிதா வெற்றி காண்பது உறுதி.
செ.கு.தமிழரசன்: சொத்துக் குவிப்பு வழக்கு புனையப்பட்ட, அரசியல் பழிவாங்கும் காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்ட வழக்கு. இதற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை மிகையானது. இந்த வழக்குக்குப் பின்னால் திட்டமிட்ட சதி வலை இருக்கிறது. 1996-இல் வழக்கு போடப்பட்டதற்குப் பிறகு இரண்டு முறை மக்களால் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாதத்துக்கு முன்புகூட மக்களவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மக்கள் மன்ற உணர்வை நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. முதல்வர் ஜெயலலிதா 20-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தகர்த்தெறிந்து வந்துள்ளார். இந்த வழக்கையும் ஜெயலலிதா தகர்த்தெறிவார்.source:denamani
No comments:
Post a Comment