Wednesday, October 15, 2014

மண்ணுக்குள் உரமாகிப்போன அனைத்து உயிர்களை நெஞ்சில் சுமந்து விரைந்து செயற்படுவோம் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை


அன்பான தமிழீழ மக்களே!
 
சர்வதேசத்தின் மௌனத்தினால் சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றி கரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. கைகளை பின்புறமாகக்கட்டியும், கலால் உதைத்தும், கதறகதற பாலியல் வல்லுறவையும், உயிருடனே கூரிய ஆயுதங்களால் வெட்டியும், தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களால் எம்மவர்கள் கொல்லப்பட்டதும், தொலைக்காட்சியிலும் இணையத்தளங்களிலும் அனைவரும் கண்ட காட்சிகளாகும். 

வெளியில் வராத இரத்தத்தை உறையவைக்கும் சம்பவங்கள் பல நூற்றுக்கணக்காக உள்ளது என்ற செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் வெளியில் சொல்ல முடியாது மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி உளத்தாலும் உடலாலும் மனநிலை பாதிக்கப்பட்டு போய்யுள்ளோர் பலபேராகும்.
 
இந்நிலையில் சிங்கள தேசத்தின இனஅழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்ற பல மக்கள்  இன்று உயிர்தப்பித்து புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்றீர்கள். கண்ணால் கண்ட உண்மைகளையும் அனுபவித்த துன்பங்களையும் உங்களைத்தவிர வேறு யாராலும் அதை தெரியப்படுத்த முடியாது. நேரடி ஆதாரங்கள் நீங்கள் என்பதையும், உங்கள் ஒத்துழைப்பே எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஒரு தற்காலிக நிவாரணி என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் எமது தாயக மற்றும் தமிழக மக்கள் இணைப்போடு புலம்பெயர் தமிழ்மக்களும், தமிழர் அமைப்புக்களும் சர்வதேசத்திற்கு தொடர்ச்சியாக கொடுத்த பல்வேறு அழுத்தங்களும், போராட்டங்களும், மனிதாபிமான அமைப்புக்கள், மற்றும் சர்வதேச ஊடகங்களின் வெளியிடப்பட்ட காட்சிகளும், சாட்சிகளும் சிங்கள தேசத்திற்கோர் அச்சத்தை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியதால் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இன்று சாட்சிகளை சேகரிக்கின்றது  .
 
இந்தநிலையில் புலம்பெயர்ந்த மண்ணில் வாழ்ந்து வரும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல இதுவரைகாலமும் சிங்கள அரசால்  கொடுமைகளுக்கு இலக்கான அனைவரும் இந்த அரும்பணியை ஆற்றக்கடமைப்பட்டுள்ளனர். அதற்காகன காலநேரம் அமைந்துள்ளது.
 
அன்பான தமிழீழ மக்களே! 

ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்    குழு தமிழ் மக்களிடம் இருந்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் மேலதிகமான விபரங்களையும் ஒக்டோபேர் 30 ம் திகதிக்கு முன்  வழங்குமாறு கேட்டுள்ளது .
 
ஒரு இனத்தை அழித்து விட்டு வெள்ளை உடையுடன் அமைதிப்புறா போன்று உலகம் முழுவதும் சுற்றி வரும் சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களையும், படுகொலைகளை புரிந்த இராணுவ உயர் அதிகாரிகள் எந்தவித பயக்கிலேசமும் இல்லாது தமிழ் மக்கள் அதிகமாகவும், வாழும் நாடுகளுக்கு வந்து, தேசமான உணர்வில் வாழ்ந்து வரும் தமிழ்மக்களை திட்டமிட்டு குழப்பவும், தமிழ்மக்களுக்கு பல்வேறு நெருக்குவாரங்களுக்கு ஆளாக்கவே நியமிக்கப்பட்டு வருகின்றது. 

கொடியவர்களின் நோக்கத்தையும், இவர்கள் மனிதநேயமற்ற கொலையாளிகள் என்பதையும் பல நாடுகளில் வாழும் தமிழ்மக்களும், அந்தந்த நாடுகளின் சட்டவாளர்களால் இவ் இராணுவ அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டும் இவர்கள் குறிப்பாக 123 நாடுகளுக்கு செல்லக்கூடாது என்கின்ற தடையையும் வழக்கு தாக்கலையும் செய்துள்ளனர்.
 
எனவே சர்வதேசம் முன்வந்து எமக்களித்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையாவது பொறுப்புணர்வுடன், தேச உணர்வோடும், நம்பிக்கை தரும் கனவுகளுடன் மண்ணுக்குள் உரமாகிப்போன அனைத்து உயிர்களை நெஞ்சில் சுமந்து அவர் செய்யட்டும், இவர் செய்யட்டும் என்றில்லாமல் இந்த பணியை எல்லோரும் ஏற்றுச்செய்யும் படி அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.
 
சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, போர்க்குற்ற விசாரணைகளுக்கான சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் வேலைகளை அனைத்துலக மட்டத்திலான மனித உரிமைகளைப் பேணும் அமைப்புகள் செய்யத் தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தெளிவாகவும் நிதானமாகவும் தமது சாட்சியங்களை வழங்கவேண்டிய காலகட்டத்தில் நிற்கின்றார்கள்.

அந்த வகையில் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர் மக்கள் அவைகள் , ஏனைய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சட்டவாளர்களினது ஆலோசனைகளைப் பெற்று அவர்களின் உதவியுடனும் வேற்றின அரச சார்பற்ற நிறுவனங்களினது உதவியுடனும் இன அழிப்பு சாட்சியங்களைப் எமக்கு முன் இருக்கும் இரு வாரங்களுக்குள் பதிவு செய்யவேண்டும் .
 
காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு சிறீலங்கா அரசாங்கத்தை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து உறவுகளும் தம்மிடம் உள்ள சாட்சிப்பதிவுகளையும் தமது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் சாட்சிப்பதிவுகளையும் தங்கள் இடங்களில் பதிவுகளை மேற்கொள்ளும் தமிழ் அமைப்புகளிடம் அல்லது ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக் குழுவுக்கு நேரடியாகவோ வழங்கி தமிழ்மக்களின் விடுதலையை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

உங்கள் விபரங்கள் யாவும் மிகவும் இரகசியமாக ஐ.நாவின் சட்டதிட்டங்களுக்கமைய பாதுகாக்கப்படும். அதே போலவே சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களும் கடைப்பிடித்தல் வேண்டும்.
 
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை




source:pathivu

No comments:

Post a Comment