
என்ன நடந்தாலும் பேச்சு மூச்சு காட்டாமல் இருக்கலாம்; ஆனால் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்க முடியாது. மூச்சு போலவே பேச்சும் தேவையாக இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் காதுக்குமான உறவுதான். ஆனால், காதோடு பேசுவது என்றால் மற்றவர்களுக்குத் தெரியாமல் பேசிக்கொள்வது என்று பொருள். வேறு யாருக்கும் தெரியாமல் காதோடு பேசுவது மாறிவிட்டது. இப்போது எல்லோரும் எல்லாவற்றையும் காதில் கை வைத்துக்கொண்டு காதோடுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முகம் பார்த்துப் பேசுவது குறைந்துவிட்டது. நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலும் காதை நோக்கியே வாய் பேசத் தொடங்கியிருக்கிறது.
எழுத்து, கண்ணோடு பேசுகிறது; காகிதத்தில் எழுத்து இடம்பெறத் தொடங்கியதும் காகிதம் பேசத் தொடங்கியது. தொலைவில் இருப்பவர்களோடும் எழுதப்பட்ட காகிதம் பேசுகிறது. கடிதம் அனுப்பிப் பேசிக்கொண்டார்கள். இப்போது கணினியும் செல்பேசியும் பேசத் தொடங்கி இருக்கின்றன. அஞ்சலில் கடிதம் என்பது மின் அஞ்சலில், குறுஞ்செய்தியில் கடிதமாகி இருக்கிறது. அப்போதும் பேசிக்கொள்ள எழுத்துத் தேவைப்படுகிறது. எழுத்து இல்லாமல் தொலைவில் உள்ளவர்களோடும் பேசிக்கொள்ள தொலைபேசி இருக்கிறது.
நாம் பேசுகிற நேரத்தில் அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாலோ, வேறு வேலைகளில் இருந்தாலோ, பேச முடியாத சூழ்நிலையில் இருந்தாலோ நம்மால் அவருடன் பேச முடியாத நிலை இருக்கிறது. அதனால் குறுஞ்செய்தியில் அவரிடம் தகவல் தெரிவிக்க முடிகிறது.
பேசத் தெரிந்த எல்லோருக்கும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; அதுவும் நமக்குத் தெரிந்த மொழி எழுத்தில் எழுதவும் படிக்கவும் கையில் உள்ள செல்பேசியில் வசதி வேண்டும். யாருக்கு அனுப்புகிறோமோ அவர் கையில் உள்ள செல்பேசியிலும் அந்த வசதி வேண்டும். இல்லையேல் குறுஞ்செய்தி அனுப்பவோ படிக்கவோ இயலாமல் போகும். இவற்றுக்கெல்லாம் மேலாகத் தாளில் எழுதுவதைவிட செல்பேசியில் எழுதக் கூடுதல் நேரம் ஆகும். ஆகவே, சொல்ல வேண்டியதைப் பேச்சுக் குரலிலேயே அஞ்சலாக அனுப்பும் வசதியின் தேவை உணரப்பட்டது. பேச நேரம் இல்லாதபோது பதில் சொல்ல இயந்திரம் வைத்திருக்கிறார்கள். நேரம் கிடைத்ததும் தேவைப்பட்டால் பேசியவரோடு தொடர்பு கொள்கிறார்கள்.
எழுதுவதைவிடப் பேசுவது எளிமையானது. நேரச் செலவும் குறைவு. எழுத்தில் தெளிவாகத் தெரியாத தொனியும் பொருளும் பேச்சில் வெளிப்படும் வாய்ப்பும் அதிகம். இன்னொருவர் கேட்கக் காத்திருக்காமல் சொல்ல வேண்டியதைச் சொல்லிவைக்கலாம்; அவரும் நேரம் கிடைக்கிறபோது கேட்டுக் கொள்ளலாம்.
இதற்கெல்லாம் Voice mail வசதியாக உள்ளது. இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:
குரல் அஞ்சல் - ராஜசிம்மன், வெ.ஆனந்தகிருஷ்ணன், அ.கருப்பையா, சோ.முத்துமாணிக்கம்
மனதின் குரல் - டி.வி. கிருஷ்ணசாமி
குரல் அஞ்சல், மின்குரல் தகவல், குரல் செய்தி - இரா.மோகனசுந்தரம்
குரல் வழி அஞ்சல் - வி. இராமச்சந்திரன்
மின்வழிக் குரல் செய்தி, மின் ஒலிச்செய்தி, மின்வழிக் குரல் அஞ்சல், மின்வழிப் பேச்சுப் பதிதல் - ப.இரா. இராச அம்சன்
குரல் அஞ்சல், மின்னணுக் குரல் அஞ்சல், குரல் மின்மடல் - என். ஆர். ஸத்தியமூர்த்தி
குரல் அஞ்சல், ஒலியஞ்சல், குரல்விடு தூது, குரல் பதிவு அஞ்சல், ஒலிப்பதிவு அஞ்சல், குரல் செவ்வி - கோ.மன்றவாணன்
ஒலி மடல், ஒலி அஞ்சல், குரல் பதிவஞ்சல், குரல் அஞ்சல் - செ.சத்தியசீலன்
குரல் தகவல், குரலஞ்சல் குரல்வழித் தகவல் - வானவில் மூர்த்தி
ஒலி அஞ்சல், அஞ்சலோசை - எஸ். சுரேஷ்
குரலஞ்சல், குரலைழப்பு - சி.இராமச்சந்திரன்
பேச்சு அஞ்சல் பதிவு - ஜனநேசன்
வாய்ஸ் மெயிலில் வெறும் குரல் மட்டும் அனுப்பப்படுவதில்லை; செய்தியும் சேர்த்து அனுப்பப்படுகிறது. வாய்ஸ் மெயில் என்பதற்குப் பேச்சு அஞ்சல் என்றால், வாய்ஸ் பாக்ஸ் என்பதற்குப் பேச்சுப் பெட்டி என்றாகிவிடும். வாய்ஸ் ரெககனேஷன் என்பதற்குக் குரல் அறிவது அல்லது பேச்சு அறிவது என்றாகிவிடும்.
விடியற்காலையில் தூங்குகிறவர்களைப் "பறவைகளின் பேச்சரவம் கேட்டிலையோ' என்று ஆண்டாள் எழுப்புகிறார். பேச்சு என்றாலே வார்த்தை இருக்கும் என்றாலும் பேச்சு வார்த்தை என்பது புழக்கத்தில் இருக்கிறது. பேச்சு என்றாலே குரல் இருக்கும் என்றாலும் பேச்சுக்குரல் கேட்டு விழித்துக் கொண்டான் என்பதும் அவரது பேச்சுக்குரல் கேட்டது என்று பேச்சுக்குரலில் அடையாளம் தெரிந்துகொள்வதும் இப்போதும் வழக்கத்தில் உள்ளன. எனவே, வாய்ஸ் மெயில் என்பதற்குப் பேச்சுக்குரல் அஞ்சல் என்று சொல்லலாம்.
Voicemail - பேச்சுக்குரல் அஞ்சல்
By முனைவர் ம. இராசேந்திரன் First Published : 09 November 2014 04:42 AM IST source:denamani
No comments:
Post a Comment