Tuesday, November 18, 2014

சொல் புதிது - 34 - WhatsAPP - கட்செவி அஞ்சல்

காண்பதும் பொய்; கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றும் சொல்கிறார்கள். விசாரிக்கும் போது கண்ணும் காதும் சேர்ந்து கொள்கின்றன. நேரில் பார்ப்பதுதான் காண்பது என்பது மாறி, யாரோ பார்த்ததை நாம் பார்க்க ஊடகம் தருவதும் காண்பது என்பதாகிவிட்டது. கேட்பதும் அப்படியே. ஆனால், கண்ணும் காதும் வைத்தது போல் சொல்லி நம்ப வைப்பதும் நடக்கிறது. நம்புவதற்குக் கண்ணும் காதும் சேர வேண்டி இருக்கின்றன.
எழுத்து, கண் வழி அறிவது; தொலைபேசி அல்லது செல்பேசி காதால் அறிவது. கண்ணும் காதும் சேர்ந்து அறியும்படியாகத் தனிப்பட்டவர் தகவல் அனுப்ப இப்போது முடிகிறது. அஞ்சலில் செல்லும் கடிதத்திலும் மின் அஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் கண் வழி அறியும் எழுத்து மட்டுமே பயன்பட்டு வருகிறது. பேச்சுக்குரல் அஞ்சலில் காதுவழி அறியும் குரல் மட்டுமே பயன்பட்டு வருகிறது. கண்ணும் காதும் தனித் தனியாகவும் சேர்ந்தும் அறியும் அஞ்சலை இப்போது அனுப்ப முடிகிறது. செய்தியோடு படத்தையோ, காணொலிக் காட்சிப் பதிவையோ, வெறும் பேச்சுக் குரலையோ அனுப்ப முடிகிறது. அதுவும் கட்டணம் இல்லாமல்.


இப்படி ஒருவருக்கு ஒருவரோ ஒரு குழுவிற்குள்ளோ அனுப்பவும் பகிரவும் கலந்துரையாடவும் ரட்ஹற்ள்அடட பயன்படுகிறது. இணையதள வசதியுடன் கூடிய செல் பேசிகளில் இந்த வசதி கிடைத்துள்ளது. மின் அஞ்சல் போல திறக்க வேண்டாம்; கடவுச் சொல் வேண்டாம் செல்பேசி எண் போதும். நமது செல்பேசியில் இருக்கும் எண்களில் யார்யார் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று அதுவே கண்டறிந்து சொல்கிறது.
தகவல் நம் செல்பேசியிலிருந்து போய்விட்டதா அல்லது முடங்கிக் கிடக்கிறதா என்றும், அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்டதா என்றும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் வாட்ஸ்ஆப் சொல்கிறது. அவர்கள் வாட்ஸ்ஆப் பார்த்தார்களா என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இப்போது இருக்கிறது. அவர்கள் பதில் அனுப்பாமலே நமது தகவலை அவர்கள் அறிந்து கொண்டார்களா என்பதை அனுப்பியவர்கள் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் விரைவில் சேர்க்கப்படவுள்ளதாம்.
2009-இல் இந்த வசதி முதன்முதலில் அறிமுகமாகியுள்ளது. 2009 நவம்பர் முதல் ஆப்பிள் செல்பேசியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அக்டோபர் 2014 நிலவரப்படி உலகில் 60 கோடிபேர் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும் 7 கோடி பேர் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்களாம். மாதம்தோறும் 2 கோடி பேருக்குமேல் புதிதாக இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்களாம். அப்படியென்றால், நாளொன்றுக்கு 8 இலட்சம் பேர் புதிதாக இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்!

  • WhatsAPP என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரை வருமாறு:

  • செ.சத்தியசீலன் - காட்சிப் பரிமாற்றம்/ இலவச ஒளித்தகவல் பரிமாற்றம் அ.கருப்பையா - எண்ண நகலி/ செய்தி நகலி

  • என்.ஆர். ஸத்தியமூர்த்தி - பல்செய்திமேடை / ஒருங்கிணைச் செய்திமேடை/ உடனடிச் செய்திமேடை (மேடை- தளம்) செ.நாராயணசாமி - குழுத் தகவல்தளம்

  • ப. இரா. இராச அம்சன் - விரைவு அலைபேசிக் குறுஞ்செய்திப் பயன்பாடு/ விலையிலா அலைபேசிப் பல்லூடகப் பகிர்வு/ கட்டணமிலா இணையவழித் தகவல் பகிர்வு

  • வெ.ஆனந்தகிருஷ்ணன் - அலைபேசித் தகவல் தொடர்பு செயலி

  • கோ.மன்றவாணன் - நெடுஞ்சேதி/ நெடுந்தகவல்/ அலை(ச்)சேதி/ மின் தூது/ அலைத்தகவல்/ வலைத்தூது/ தூதுசெயலி/ சேதிப்(தகவல்) பரிமாற்றி/ சேதித்(தகவல்) தளம்/ செல்தகவல் தூதுலா(வி)

  • ஜனநேசன் - இணையவழித் தகவல் பரிமாற்றம்/ இணைய உரையாடல்.

படிக்கவும் கேட்கவும் கிடைத்துவந்த மின் அஞ்சல் குறுஞ்செய்தி வசதிகளைப் படம் பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான வசதிகளோடு வாட்ஸ்ஆப் வழங்கி வருகிறது. கண்ணால் படிக்கவும் பார்க்கவும் காதால் கேட்கவுமான வசதிகளைத் தருகிறது வாட்ஸ்ஆப். படித்து அறிந்து கொண்டிருக்கும் செய்தியும் தகவலும் பார்க்கவும் படிக்கவும் பேசவும் கேட்கவுமாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதனால் கண்ணும் செவியும் சேர்ந்து அறியும்படி அனுப்பப்படும் அஞ்சலாக இருப்பதால் கட்செவி அஞ்சல் என்று சொல்லலாம். ""கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்'' என்று பாரதியார் பாடுகிறார்.
""சுருண்டு, படம் சுருக்கி, உறங்கிக் கிடந்த நேரம் போக, மீதி நேரங்களில் பாம்பு ஆய்வுத்தொகைகளை அலசிப்பார்த்தது. திறனாய்வாளர் பேராசிரியர், கலாநிதி, குமரேச குத்தாலலிங்கம் கோபக்குரலில் எழுப்பும் வினா கட்செவியில் உறைத்தது'' என்று நாஞ்சில்நாடன் எழுதுகிறார்.
"கட்செவி' என்றால் பாம்பு; கண்ணே செவியாக உடையது. கண்ணுக்கும் செவிக்குமாக அஞ்சல் அனுப்புவதால் வாட்ஸ்ஆப், கட்செவி அஞ்சலாகிறது. பாம்பு என்றால், படமும் நினைவுக்கு வரும்; கட்செவி அஞ்சலில் படமும் அனுப்ப முடியும்தானே!

WhatsAPP - கட்செவி அஞ்சல்

First Published : 16 November 2014 01:52 AM IST   source:denamani

No comments:

Post a Comment