Friday, November 21, 2014

புலிகளின் "மாத்தையா" வுக்கு ஆயுதம் வழங்கியது எனது அப்பா தான் !

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது, பல குட்டுகள் இதனால் வெளிப்பட ஆரம்பமாகியுள்ளது. அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த கதைகளில் எவ்வளவுதூரம் உண்மை உள்ளது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிக்கொண்டு வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆரம்பகாலத்தில், துணைத் தலைவராக மாத்தையா என்னும் நபர் இருந்து வந்தார். இவர் தொடர்பாக பலர் அறிந்திருப்பார்கள். 1990 களில் இவரை புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் திடீரென கைதுசெய்தார்கள். ஆரம்பத்தில் இதனை சில பொதுமக்கள் கூட எதிர்தார்கள். தலைவர் பிரபாகரன் எதேட்சை அதிகாரம் படைத்தவர். அதனால் தான் மாத்தையாவை முன்னேற விடாது அவரை கைதுசெய்து தடுப்பில் வைத்துள்ளார்கள் என்று கூட பேசினார்கள். ஆனால் மாத்தையா இந்திய "றோ" அமைப்போடு தொடர்பை பேணி வந்ததாக புலிகளின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

இதுபோக அவர் "றோ" அமைப்பின் ஊடாக சிங்கள தேசத்தோடும் ஒட்டி உறவாட ஆரம்பித்துவிட்டார் என்ற தகவலும் அப்போது கசிந்தது. ஆனால் சிலர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார். தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட மகிந்தர் புலிகளை அழித்தார் என்று மகிந்த தரப்பு கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. இதனை பொறுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் முகியஸ்தரும் பிரேமதாசாவின் மகனுமான சஜித் பிரேமதாச, எனது அப்பா புலிகளின் மாத்தையாவுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மேடையில் வைத்து என்ன சொல்கிறார் என்றால்...
மாத்தையாவுக்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை இரண்டாகப் பிரிக்கவே, தனது அப்பா ஆயுதங்களை வழங்கினாராம். அதாவது மாத்தையாவுக்கு ஆயுதங்களை வழங்கி தலைவர் பிரபாகரனோடு மோதவிட்டு அன்றே புலிகளை இரண்டாகப் பிழந்து அழிக்க அப்பா திட்டம் தீட்டினாராம் என்கிறார் சஜித் பிரேமதாச. புலிகளின் வேவுப் பிரிவு வழங்கிய தகவலுக்கு அமையவே, மாத்தையா அன்று கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். இதுபோலவே பொட்டு அம்மான் பல மாதங்களுக்கு முன்னரே கருணாவைப் பற்றி தகவலை வெளியிட்டு , கருணாவை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் கருணா தொடர்ந்தும் நல்ல பிள்ளைபோல நாடகமாடி வந்தார்.
இந்த ஆயுதம் வழங்கியமை தான் எனது தந்தை(பிரேமதாச) கொல்லப்பட காரணமாக அமைந்தது என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். இரண்டு பக்கமும் ஒருவர் செய்த குட்டுகளை அம்பலப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இனி இனி என்னவெல்லாம் வரப்போகிறதோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
source:athirvu


No comments:

Post a Comment