Tuesday, December 16, 2014

எவர் வென்றாலும் சர்வதேச விசாரணையே தமிழ் மக்களது கோரிக்கை-கே.சிவாஜிலிங்கம்!!

எதிர்வருகின்ற தேர்தலில் மைத்திரியை ஆதரிப்பது தவிர்ந்த வேறு எந்த தெரிவும் இனி தமிழ் மக்களிற்கு இருக்கப்போவதில்லை.ஏதாவதொரு நல்லெண்ண செய்தியை வெளிப்படுத்துவதன் மூலம் தனக்கான ஆதரவினை தமிழ் மக்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டுமென மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்ப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் இது பற்றி மேலும் விபரிக்கையினில் பல தரப்புக்களும் வலியுறுத்தி வந்த மூன்றாவது வேட்பாளர் விடயம் இனி சாத்தியமற்றது.எமது மக்களிற்கு இப்போது மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பமொன்றே தேவையாக இருக்கின்றது.அதற்காக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் எதிரணி வேட்பாளரை ஆதரிப்பதென்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது.

எமது தரப்புக்கள் பேரம் பேசும் சந்தர்ப்பத்தையும் இழந்துவிட்டன.எனினும் கடந்த சில வருடங்களுள் மஹிந்த அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் ஏக்கரிற்கும் மேற்பட்ட காணியினில் ஒரு பகுதியினையாவது விடுவிப்பது பற்றியேனும் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் எமது இனத்திற்கு கிடைக்க கூடிய நன்மைகளை கருத்தினில் கொண்டு பொருத்தமான முடிவை எடுக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.எனினும் எவரை ஆதரித்தாலும் சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சுக்கள் என்ற விடயத்தினில் எவர் வென்றாலும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளமுடியாதென தெரிவித்த அவர் அரசனை நம்பி புருசனை கைவிட்டது போன்று சர்வதேசத்தை கைவிடமுடியாதெனவும் அவர்  தெரிவித்தார்.

இதனிடையே நேற்று வவுனியாவினில் நடைபெற்ற தமிழரசுக்கட்சி கூட்டத்தினில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட 45 கோடி பணத்தை மஹிந்தவிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.அதே போன்றே தற்போது வடமாகாணசபையினில் என்னால் முன்னால் வைக்கப்பட்டுள்ள இனஅழிப்பு பிரேரணையினை கூட அதே போன்று மஹிந்தவிடம் பணம் பெற்றே முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஒட்டு மொத்தமாக பெற்ற பணத்தை வைக்க இடத்தை ஏற்பாடு செய்து தருமாறு சுமந்திரனை கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அவர் அப்போது கொலைகாரர்களான மஹிந்தவையும் சரத்பொன்சேகாவையும் நிராகரிக்க விடுத்த கோரிக்கை இப்போதும் பொருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.source:pathivu

No comments:

Post a Comment