Sunday, December 21, 2014

புலிகள் இந்தியாவிலும் தமிழீழம் கேட்கிறார்கள் எனக் கூறலாமா? ‘றோ’ ஆடும் பொய்க்கால் குதிரையாட்டம்!

இந்தியாவின் உளவுத்துறையான ‘றோ’ தாயகத் தமிழருடன் கடுமையான பகைமை கொண்டு செயற்படுகின்றது. அவர்களின் நாளாந்த வாழ்வைச் சிதைவுபடுத்துவதிலே ‘றோ’ தன் கவனத்தைப் பதித்துள்ளது.

 இதற்கான பல ஆதரங்களை இங்கு நாம் முன்வைக்க முடியும். அதன் உச்சக்கட்டமாக 2009ம் ஆண்டு போரின்போது இடம்பெற்ற இனப்படுகொலையைக் குறிப்பிட முடியும். மிகப் பரவலான முறையில் அச்சமயம் தாயகத்தில் ‘றோ’வின் பிரசன்னம் காணப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் இந்திய ஊடுருவல்களை மிக இரகசியமாக அறிந்து இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கொடுப்பதே ‘றோ’வின் அதிமுக்கிய கடமையாகும். ஆனால் ‘றோ’ கடந்த பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செற்பாடுகள் குறித்தும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துவரும் நிறுவனமாக மாத்திரமே இயங்கி வருவது இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

 சீனா, பாகிஸ்தான் திடீர் ஊடுருவல்களை கோட்டைவிட்ட ‘றோ’ தமிழர்களைப் பற்றித் தவறான தகவல்களையே சேகரித்துள்ளது. புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளின் உளவுத் துறையினருக்கும் அந்தத் தவறான தகவல்களையே அது அனுப்பி வருகின்றது. சிறிலங்காவின் ஒரு பகுதியுடன் தமிழ்நாடு, கேரளம், கன்னடம், ஆந்திரா மாநிலங்களின் பெரும்பகுதிகளையும் இணைத்தே விடுதலைப் புலிகள் தமிழீழம் கோருகிறார்கள் என்பது றோவின் கண்டுபிடிப்பு.

இந்திய மத்திய அரசாங்கம் ‘றோ’ ஆடும் பொய்க்கால் குதிரையாட்டம் குறித்து எவ்வித ஆய்வும் செய்வதில்லை. சாதாரண நடைமுறைக்கே ஒவ்வாத பொய்த் தகவல்களை மத்திய அரசு அப்படியே நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து வருகின்றது. கடந்த வாரமும் அதாவது மோடி அரசாங்கம்கூட இதுபற்றி எவ்வித ஆய்வும் நடத்தாமல் ‘றோ’வின் பொய்த் தகவலை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது.

தமிழீழம் எத்தகைய எல்லைப் பகுதிகளைக் கொண்டது என்பதற்கான நூற்றுக் கணக்கான ஆதாரங்கள் இருந்தும் இந்திய மத்திய அரசு ‘றோ’வின் பொய்யான அறிக்கையையே தொடர்ந்தும் சமர்ப்பித்து வருகின்றது. பல நாடுகள் இதன் காரணமாகவே தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிராகரித்து வருகிறார்கள் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய இவ்விடயத்தில் ஏன் பொய் சொல்ல வேண்டும் என அந்நாடுகள் கருதுகின்றன. தளம் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை இந்தியா ஐந்து ஆண்டுகளுக்குத் தடைசெய்துவிட்டு, புலிகள் இந்தியாவிலும் தமிழீழம் கேட்கிறார்கள் எனக் கூறலாமா? இந்தியா தடைசெய்துள்ள அமைப்புக்களுடன் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு உண்டு என்ற மற்றொரு பொய்யும் ‘றோ’ புனைந்த கதை. அதனையே மத்திய அரசு நீதிமன்றத்தில் இப்போதும் சமர்ப்பித்துள்ளது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். இல்லாத புலிகளைப் பற்றி நீதி தேவனிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்வது எவ்வகையில் தர்மமாகும்?

மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு இது குறித்து பூர்வாங்க விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழீழக் கோரிக்கை பிறந்த வரலாறு, சிறிலங்காவில் ஏற்பட்ட இனப்படுகொலை, இன ஒதுக்கல், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பமான வரலாறு, ‘றோ’வின் நடவடிக்கைகள், தற்போதைய தமிழர்களின் அவலநிலை,

 அதற்கான தீர்வு, விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த செயற்பாடுகள் அகியவை குறித்து மோடி அரசு பூர்வாங்கமாக அறிந்துகொள்வது மிக அவசியம் என்பதையும் பிரதமர் மோடிக்கு நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

-உலகத் தமிழர்-

No comments:

Post a Comment