Saturday, January 24, 2015

ஆன்மா சாந்தியடையாது!

By ஆசிரியர்

First Published : 24 January 2015 02:54 AM IST
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கைகோத்து மாணவர்களும் களத்தில் குதித்த நாள் 25, ஜனவரி 1965. அரை நூற்றாண்டு காலம் ஓடி முடிந்துவிட்டது. மொழிப்போர் தியாகிகளுக்காக கூட்டங்கள் நடத்தும் திராவிடக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், இந்த நாளை மிகப்பெரிய அளவில் விழாவெடுத்து கொண்டாட இருக்கின்றன.
ஹிந்தி எதிர்ப்பின் அடிப்படை நோக்கம், பல மொழிகளைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஹிந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டால், ஹிந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டால், எல்லா மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியை அழித்தொழிக்கும் முயற்சியாக அது அமைந்துவிடும் என்பதுதான்.

அந்தந்த மாநிலங்களின் மொழி அழிந்துவிடக்கூடாது என்பது இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்தே பேசப்படும் கருத்துதான். தனது சுயசரிதையை குஜராத்தி மொழியில்
எழுதிய மகாத்மா காந்தியும் தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்தான். இருப்பினும், இந்தியாவின் பொதுமொழியாக ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தலைவருக்கும் மாற்றுக் கருத்து இருந்தபோதிலும், தாய்மொழிக்கு அனைவரும் முக்கியத்துவம் தரவே செய்தனர்.
ஹிந்திக்கு பொதுவான எதிர்ப்பு இருந்தபோதிலும், அதை தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த போராட்டமாக, இந்தியா முழுவதையும் திரும்பிப்பார்க்கச் செய்த நிகழ்வாக மாற்றியது அறிஞர் அண்ணா தலைமையிலான பிளவுபடாத திராவிட முன்னேற்றக் கழகம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த அடுத்த இரு ஆண்டுகளில் தி.மு.க.
ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு, இன்றுவரை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகள்தான் ஒன்று மாறி ஒன்று ஆட்சி பீடத்தில் இருக்கின்றன. தமிழ் மொழி, அரசியலுக்கு, ஆட்சி பீடத்துக்கு பயன்பட்டது. பதிலுக்கு, அரசியலும் ஆட்சிபீடமும் தமிழுக்குச் செய்தது என்ன?
தமிழ்நாடு என்ற அழகான பெயர் நம் மாநிலத்துக்கு கிடைத்தது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது, உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியது என பட்டியலிடத் தொடங்கினால், விரைவிலேயே பட்டியல் முடிந்துபோகும்.
ஹிந்தியை மாநிலத்துக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்திய நாம், இப்போது தமிழ் மொழியைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். பொதுவெளியில்கூட ஆங்கில மோகத்துக்கு அணை போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். நவோதயா பள்ளிகள் கூடாது என்றோம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல், ஆங்கிலமும் ஹிந்தியும் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகிறது. நீதிமன்ற வழக்காடு மொழியாகக்கூட தமிழை வளர்க்கவில்லை.
1947 முதல் 1967 வரை தமிழ்நாட்டில் நிலவிய தமிழ்வழிக் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது. ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருநகரங்களில் மட்டுமன்றி, கிராமங்களிலும் தொடங்க அனுமதிக்கப்பட்டது இதே திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான்.
தமிழ்நாட்டில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகள், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழில்தான் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தை இந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் உருவாக்கவில்லை. அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில்தான் படிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவில்லை. ஆகவே, தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கும் நிலை உருவெடுத்தது. தமிழைப் படிக்காமலேயே ஒருவர் பட்டம் பெறும் நிலை, தமிழ்நாட்டில் இயலக் கூடியதாகியது.
தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் பெரும்பான்மையோர் திராவிடக் கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களது ஆர்வம், தமிழைக் காட்டிலும் அரசியல் மீதுதான் அதிகமாக இருந்தது. ஆசிரியர்கள் அரசியல் சாய்வு கொண்டதால் அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டது. 1960-களில் டாக்டர்களையும் அறிஞர்களையும் வல்லுநர்களையும் உருவாக்கிய அரசுப் பள்ளிகள், பின்னர் கல்வித்தரம் குறைந்த பள்ளிகளாக மாறின. அல்லது மாற்றப்பட்டன. கட்சிக்காரர்களான அவர்களைத் தட்டிக் கேட்க அரசு துணியவில்லை. விளைவு, மக்கள் தங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர்த்தால்தான் படிக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசே உருவாக்கியது.
இன்று ஆங்கில வழிப் பள்ளிகளின் உரிமையாளர்களாக திராவிடக் கட்சித் தலைவர்களின் வாரிசுகள் இருக்கிறார்கள். திராவிடப் பாரம்பரியம் பற்றிப் பேசும் குடும்பங்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகள் தமிழை நடுநடுவே இணைப்பு மொழியாகப் பயன்படுத்தும் அளவுக்குத் தமிழ் சிதைந்து கிடக்கிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஹிந்தியை எதிர்த்தோம்; ஆங்கிலத்துக்குத் தீனி போட்டு வளர்த்தோம்; தமிழைப் பட்டினி போட்டோம். இவைதான் நாம் செய்தவை.
மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை, தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்படுவதும், தமிழ் படித்தவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதும், தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவதும்தான். இவற்றை உறுதிப்படுத்தினால் தமிழ் காப்பாற்றப்படும். அரசுப் பள்ளிகளை உயிர்த்தெழ வைக்கும். மக்களை கல்விக் கட்டணச் சுமை அல்லது கட்டணக் கொள்ளையிலிருந்து காப்பாற்றும்.
இவற்றைச் செய்யாவிட்டால், மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் எடுக்கும் விழா, அவர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகத்தான் இருக்கும். அவர்களது ஆன்மா சாந்தி அடையாது!source denamani

No comments:

Post a Comment