Wednesday, April 08, 2015

காலை குறி வைத்திருக்கலாமே?

DinamaniBy சிரியர்

First Published : 08 April 2015 01:58 AM IST
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் சட்ட விரோதமாகச் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்த இருபது தொழிலாளர்கள், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பவர்கள் அனைவருமே தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்குப் பஞ்சம் பிழைக்கப் போன அப்பாவி ஆதிவாசி மரம் வெட்டிகள்.
செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்புக்கான சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் என்று பரவலாக அறியப்படும் சிவப்பு சந்தன மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் ஈவிரக்கமோ, மனிதாபிமானமோ இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்று கேட்டால், சிறப்புக் காவல் படையினரின் மனசாட்சியேகூட அதை ஏற்றுக் கொள்ளாது!

செம்மரங்களை வெட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்கள் கடத்தல்காரர்கள் அல்லர். வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்துபவர்களையும், இந்தியாவிலிருந்து நட்சத்திர ஆமைகள், தந்தங்கள், கடவுள் சிலைகள், சந்தனக் கட்டைகள் போன்றவற்றைக் கடத்துபவர்களையும் போன்றவர்கள் அல்ல இவர்கள். இவர்கள் கைது செய்யப்படலாம், தடுப்புக் காவல் படையினரால் தாக்கப்படலாம், ஆனால், நாயைச் சுட்டுக் கொல்வதுபோலச் சுட்டுக் கொல்லப்படுவது என்பது நினைத்துப் பார்க்கவே கொடூரமானதாக இருக்கிறது.
சேஷாசலம் வனப் பகுதியில் திருட்டுத்தனமாக செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிவளைத்து சரணடையச் சொன்ன காவல் படையினரை, அரிவாளாலும், கோடாரியாலும் அந்தக் கும்பல் தாக்க முற்பட்டதாகவும், அதற்காகத் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாகவும் காவல் துறையினர் கூறுவது உண்மையாகவே இருக்கலாம். கூலிக்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த அப்பாவிகளை ஏவி, காவல் படையினரைத் தாக்கச் சொல்லிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிப் போயிருக்கக் கூடும். காவல் துறையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் தவறில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கிகள் காலுக்குக் குறி வைக்காமல் உயிருக்கு உலை வைத்திருக்கிறதே அதுதான் கொடூரம்!
ஆந்திர மாநிலத்தில் கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் பரவலாக சிவப்பு சந்தன மரங்கள் வளர்கின்றன. ஏறத்தாழ 4.67 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச ஒப்பந்தப்புள்ளி மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் ஏலத்தில் ஆந்திர அரசுக்கு இந்த செம்மரக் கட்டைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் ரூ.1,000 கோடிக்கும் அதிகம்.
கடந்த ஆண்டு மே மாதம் இதே சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல்காரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013-இல் மட்டும் 2,025 டன் செம்மரக் கட்டைகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. கடந்த சில வருடங்களாக செம்மரக் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக் கட்டைகள் கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்பட்டன.
செம்மரக் கட்டைக் கடத்தல்காரர்களுக்கும், தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே மோதல் நடப்பதும், காவல் துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதும் புதிதொன்றுமல்ல. அப்பாவி மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கடத்தல்காரர்கள் சமயோசிதமாகப் பயன்படுத்தித் தங்களைப் பிடிக்க முற்படும் காவல் துறையினரைத் தாக்குவதும் புதிதல்ல.
2013 டிசம்பர் 15-ஆம் தேதி கடத்தல்காரர்களுக்கும் தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையின்போது, காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. இரண்டு மூத்த வனத் துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களால் கல்லால் தாக்கப்பட்டு இறந்தனர். காவல் படையினர் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். இன்னும் மூன்று பேர் தப்பி ஓடினர். அதுமுதலே, கடத்தல்காரர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி தடுப்புக் காவல் படைக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
செம்மரக் கடத்தல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும், கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியாக வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து யாருக்குமே இருக்க முடியாது. அதற்காக, கடத்தல்காரர்களின் கூலிகளாக மரம் வெட்டிப் பிழைப்பு நடத்தும் ஏழை ஆதிவாசிகள் சுட்டுக் கொல்லப்படுவதா என்கிற கேள்விக்கு, இருதயத்தின் ஓரத்தில் ஈரம் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்கூட ஆமோதித்து பதிலளிக்க இயலாது.
சட்டப்படி, தற்காப்புக்காக நடத்தப்படும் என்கவுன்ட்டராகவே இருந்தாலும், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அவர்கள் தற்காப்புக்காகத்தான் அதிரடித் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டப்படியான நடவடிக்கையை, இந்தியா முழுவதுமே காவல் துறையினர் கடைப்பிடிப்பதில்லை. இந்த முறையாவது, சட்டம் முறையாகத் தனது கடமையைச் செய்யட்டும்!
பண பலமும், அரசியல் பின்புலமும் உள்ள செம்மரக் கடத்தல்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காகக் கோடாரியைக் கையிலெடுத்து மரம் வெட்டிய ஏழை ஆதிவாசிகள் கொல்லப்படுகிறார்கள். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?

No comments:

Post a Comment