Wednesday, April 08, 2015

இலங்கை வீரர்களுக்கு சென்னையில் தடை: டெல்லி டேர்டெவில்ஸ் அதிருப்தி

இலங்கை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகர் டி.ஏ. சேகர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை (2013-ல் தடை விதிக்கப்பட்டது. 2014-ல் சென்னையில் எந்தவொரு ஐபிஎல் போட்டியும் நடக்கவில்லை). இந்த ஆண்டும் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன் விடுத்த வேண்டுகோளை ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு ஏற்றுக்கொண்டது.
இந்த வருட ஐபிஎல்-லில், ஏஞ்சலோ மேத்யூஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்), திசாரா பெரேரா (கிங்ஸ் X1 பஞ்சாப்), லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய மூன்று இலங்கை வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். தடையினால் இவர்களும் மூவரும் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகர் டி.ஏ. சேகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
"எங்கள் அணியைச் சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸால் சென்னையில் நடைபெறுகிற போட்டியில் கலந்துகொள்ள முடியாது. அவர் குறைந்த விலைக்கு வாங்கப்படவில்லை. அவரை 7.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தோம். அவரை தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஆல்பி மார்கலுடன் இணைந்து விளையாட வைப்பதற்காகவே தேர்ந்தெடுத்தோம். ஒரு வீரரை உங்கள் அணியில் விளையாட வைக்க முடியாது என்றால் அது பின்னடைவாகவே இருக்கும். மலிங்காவால் மும்பை அணிக்கு விளையாட முடியாமல் போனால் அவர்களுக்கும் அது பின்னடைவாகவே இருக்கும்" என்றார்.
நாளை (ஏப்ரல் 9) சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன. தடை விதிக்கப்பட்டதால் மேத்யூஸால் அப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது. இதனால் அவர் சென்னைக்கு வரவில்லை. source denamani

No comments:

Post a Comment