உலகம் முழுவதிலும் சிலர் தங்களின்
தாய்மொழியைக் கைவிட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் பயன்படும்
என்று கருதும் மொழியைப் படிக்கிறார்கள். அது கடந்த இரண்டு நூற்றாண்டு
காலமாக அதிகமாக இருந்து வருகிறது. தாய்மொழி ஓர் அடையாளம் என்றும்,
அவசியமில்லாதது என்றும் கருதி வருகிறார்கள். அது ஏழ்மையான நாடுகளிலும்,
வளர்ச்சி அடையும் நாடுகளிலும் பொதுப் பண்பாக இருந்து வருகிறது.
ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பிய நாட்டினர், புதிய நிலப் பகுதிகளையும்,
தங்கம், வெள்ளி, நறுமணப் பொருள்களையும் தேடிக் கடல் வழியாக மாலுமிகளையும்,
ஆள்களையும் அனுப்பினார்கள். அட்லாண்டிக், பசிபிக் சமுத்திரங்களிலும், இந்து
மகா சமுத்திரத்திலும் பயணித்துப் புதிய நாடுகளைக் கண்டறிந்த அவர்கள்
அவற்றைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டார்கள். தங்கள் மொழியை புதிய
நாடுகளின் தேசிய மொழியாக்கிவிட்டார்கள். அதனால், பல நாடுகளில் ஆதிமக்கள்
மொழிகள் அழிந்து ஒழிந்துவிட்டன.
ஒரு மாதத்துக்கு முன்னால்
புதுச்சேரியில் ஒரு பெண் பத்திரிகையாளரைச் சந்தித்தேன். அவர் இலங்கையில்
இனக் கலவரம் உச்சத்தில் இருந்த காலத்தில் தன் கணவரோடு ஆங்கிலப் பத்திரிகை
நிருபராக இருந்தவர். அவர் சொன்னார்: நண்பர்கள் மாலைப் பொழுதில்
விருந்துகளுக்கு அழைப்பார்கள். விருந்தில் முதலில் கேட்கும் கேள்வி
உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்பதுதான்.
இலங்கையில் சிங்களவர்கள்
ஹிந்தி தெரியுமா என்று கேட்பதற்கு ஓர் அர்த்தம்தான் உண்டு. அது உங்கள்
தாய்மொழி வேறாக இருந்தாலும் ஆட்சி மொழியான ஹிந்தியைத் தெரிந்து வைத்துக்
கொண்டு இருக்கிறீர்கள். உங்களைப் போல் இலங்கையில் வாழும் தமிழர்கள், சிங்கள
மொழியைப் படிக்க வேண்டியதுதானே. ஆட்சிமொழியான அதனை ஏன் படிக்க
மறுக்கிறார்கள் என்று கேட்பதுதான்.
இலங்கை சுதந்திரம் பெற்றபோது,
சிங்களம், தமிழ் என்று இரண்டு மொழிகளும் ஆட்சிமொழியாக இருந்தன. 1956-ஆம்
ஆண்டில் பிரதமரான சாலமன் பண்டாரநாயகே சிங்களம் ஒன்றுதான் ஆட்சிமொழி என்று
சட்டம் நிறைவேற்றினார். அதுதான் மொழியின் ஆதிக்கம். பெரும்பான்மை என்பதின்
ஆணவம்.
உங்கள் தாய்மொழி எத்தனைச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் சரி,
ஆட்சிமொழியான எங்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் மூன்றாம்தர
குடிமக்களாகிப் போவீர்கள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படும்
நாட்டில் - ஒரு மொழியை ஆட்சிமொழியாக்கி வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்
சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
பதினைந்து நாள்களுக்கு முன்னால்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கிளப்பில் சந்தித்தேன். நாடாளுமன்றம் எப்படி
இருக்கிறது என்று விசாரித்தேன்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரே
ஹிந்திமயமாக இருக்கிறது. குஜராத்காரரான பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில்
பேசப் பிரியப்படுகிறார். உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேட்கும்
கேள்விகளுக்குக்கூட ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் ஹிந்தியில் பதில்
சொல்கிறார்கள்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் தாய்மொழி ஹிந்தி.
வழக்குரைஞராக இருந்தவர். அவர் சூழ்நிலை காரணமாக ஹிந்தியில் தன் பேச்சைத்
தொடங்குகிறார். உறுப்பினர்களின் முகங்களைப் பார்த்துவிட்டு ஆங்கிலத்துக்கு
மாறிவிடுகிறார்.
மனித வளத் துறை, கலாசார அமைச்சகம் எல்லாம் ஹிந்தி மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன என்றார்.
தேசமே
மொழியால் ஆனது இல்லை. மக்கள்தான் மொழிகளைக் கண்டுபிடித்து நெடுங்காலமாகப்
பேசிக் கொண்டு வருகிறார்கள். சம்ஸ்கிருதம் என்னும் இந்தோ - ஐரோப்பியக்
குடும்பத்து மொழியும், தமிழ் என்னும் திராவிடக் குடும்பத்து மொழியும்
இந்தியாவின் பழம்பெரும் மொழிகள். அவற்றோடு ஆயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள்
பேசப்பட்டு வருகின்றன.
பதினேழாவது நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்
பகுதிகளைக் கைப்பற்றி ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிய ஆரம்பித்தார்கள்.
சம்ஸ்கிருத மொழி இருப்பதும், அதன் இலக்கிய, இலக்கண வளமும் அவர்களுக்குத்
தெரிந்து இருந்தது.
எனவே, 1813-ஆம் ஆண்டு வாக்கில் கொல்கத்தா, வாராணசி, புணேவில் சம்ஸ்கிருதப் பள்ளிகள் ஆரம்பித்து கல்வி கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது,
ஆங்கிலம் படித்து சிலர் அரசு வேலைகளில் சேர்ந்திருந்தார்கள். ஆங்கிலப்
படிப்பு பொது அறிவு பெற அதிகமாகப் பயன்படுகிறது என்று சிலர் நம்பினார்கள்.
அவர்களில் முதன்மையானவர் ராம் மோகன் ராய்.
சமூக, அரசியல்
சீர்திருத்தவாதியான அவர் இந்தியர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியே
கற்பிக்கப்பட வேண்டுமென்று கவர்னர் ஜெனரலுக்கு தொடர்ந்து மனு கொடுத்துக்
கொண்டிருந்தார். அதோடு, சொந்தப் பணத்தில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஆங்கில
வழியில் பாடம் கற்பிக்க ஏற்பாடுகள் செய்தார். இஸ்லாமியர்கள் பாரசீக
மொழியில் படிப்பு வேண்டுமென்றார்கள்.
இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த
வில்லியம் பெண்டிங் எந்த மொழியில் இந்தியர்களுக்குக் கல்வி அளிப்பதென்று
அரசுக்குப் பரிந்துரைக்கும்படி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும்,
வழக்குரைஞரும், சரித்திர ஆசிரியருமான தாமஸ் பாபிங்டன் மெக்காலேவை கேட்டுக்
கொண்டார்.
"ஆறாம் வகுப்பில் இருந்து இந்தியர்களுக்கு ஆங்கில மொழியில்
கல்வி அளிக்க வேண்டும். இந்திய மொழிகள் எதற்கும் கல்வி அளிக்கும்
தகுதியில்லை. எனக்கு எந்த இந்திய மொழியும் தெரியாது' என்று பரிந்துரை
எழுதிக் கொடுத்தார்.
அவரது பரிந்துரை இரண்டாண்டுகள் கழித்து, 1835-ஆம்
ஆண்டில் ஏற்கப்பட்டு, ஆங்கிலம் இந்தியாவின் கல்வி மொழியாக்கப்பட்டது.
1857-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதும், உயர்கல்வியும்
ஆங்கிலம் வழியானது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்
ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஆங்கிலம்
இருந்தது.
அதனால், அரசியல், நிர்வாகம், சட்டம், அறிவியல் தத்துவம்,
வணிகம், தொழில், கலை, இலக்கியம் என பல துறை சார்ந்த நூல்கள் அந்த மொழியில்
எழுதப்பட்டிருந்தன. பிற மொழிகளில் இருந்து பழைய பனுவல்களும், புதிய
நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதன் காரணமாகப் படிக்கத் தரமான
நூல்கள் எளிதாகக் கிடைத்தன.
ஆங்கில மொழி வழியில் படித்த சிலர் நல்ல
வேலைகள் பெறவும், அதிகமான சம்பளம் பெறவும், சமூகத்தில் கெüரவம் பெறவும்
முடிந்தது. அதனைக் கண்டு பலரும் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தார்கள். தங்களின்
அறிவாற்றலை நிலைநாட்ட அது தகுந்த மொழியென நம்பினார்கள். சர்வதேச
அரங்குகளில் பேசியும், எழுதியும், விருதுகள் பெற்றும் தங்கள் மேதமையை
நிலைநாட்டினார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில்
ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக இருந்தது. ஆங்கிலேய அரசை அவர்கள் மொழியில்
பேசியும், எழுதியும் எதிர்த்தார்கள். சுதந்திர நாட்டின் ஆட்சிமொழியாக
அன்னிய மொழி இருப்பது அடிமைச் சின்னம் என்று மகாத்மா காந்தி உள்பட பல
தலைவர்கள் கருதினார்கள்.
1950-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு
பிரகடனப்படுத்தியபோது, பதினைந்து ஆண்டுகளுக்கு ஹிந்தியுடன் ஆங்கிலம்
இணைப்பு மொழியாக இருக்கும். பின்னர் ஹிந்தி மட்டும் ஆட்சிமொழி என்றார்கள்.
ஆனால், ஐம்பது ஆண்டுகளில் சர்வதேச நிலைமை மாறிவிட்டது.
தொழில்,
படிப்பு, வணிகம் என்பது பல நாடுகளோடும் சம்பந்தப்பட்டது என்பதாகியது.
அதனால், இந்தியாவில் ஆங்கிலம் படிப்பது கூடுதலாகியது. நாடு முழுவதிலும்
ஆரம்பப் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.க்களில் படிப்பு
மொழியாக ஆங்கிலம் இடம்பிடித்துக் கொண்டது.
மத்திய அரசோ, மாநில அரசுகளோ -
இந்திய மொழிகளின் வளர்ச்சி, முன்னேற்றம் என்பதற்கு அறிவுப்பூர்வமான
செயல்கள் எதையும் செய்யவில்லை. ஆனால், தங்கள் மொழி நாட்டின் ஆட்சிமொழியாக
இருக்க வேண்டும் என்பதில் பேராசை கொண்டிருக்கிறார்கள். அரசுத்
திட்டங்களுக்குப் பெயர் வைத்தும், மாநாடுகள் நடத்தியும் ஹிந்தியும், இந்திய
மொழிகளும் வளர்ந்துவிட்டன என்று மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
"இந்தியா
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன போதிலும் ஹிந்தியை நாட்டின் அலுவல்
மொழியாகப் பயன்படுத்த முடியவில்லை' என்று உள்துறை அமைச்சர்
ஆதங்கப்படுகிறார். அதில் அர்த்தமில்லை.
இந்தியா ஒரு மொழி நாடல்ல.
ஆயிரம் மொழிகள் பன்னெடுங்காலமாகப் பேசப்படும் நாடு. வேறுபட்ட எழுத்துகளால்
மொழிகள் எழுதப்படுகின்றன. சட்டம் போட்டுவிட்டதால் மொழி வளர்ந்து விடாது.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பேசுவதாலோ, வெளிநாடுகளில் பிரதமர் உரை
நிகழ்த்துவதாலோ மொழி வளம் பெற்றுவிடாது.
மொழி என்பது மனிதர்களின் அரிய
கண்டுபிடிப்பு. அதில் எந்த மொழி சுய முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி,
சர்வதேசப் பயன்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கிறதோ அந்த மொழியே மாணவர்கள்
விரும்பிப் படிக்கும் மொழியாக இருக்கிறது. அதனைத் தாய்மொழி, தேச மொழி,
செம்மொழி என்று சொல்லி தடுத்துவிட முடியாது.
தாராள மயம், உலக மயம்
என்பதில் தொழில், வணிகம், கல்வி என்பன தேச எல்லைகளைத் தகர்த்துவிட்டன.
அதில் மொழிகளும் சேர்ந்து போகின்றன. அது ஹிந்திக்கோ, இந்திய மொழிகளுக்கோ ஆன
பிரச்னை இல்லை. சர்வதேச மொழிகளின் பிரச்னை.
மொழியே அறிவு இல்லை;
அறிவுதான் மொழி வழியாகச் சொல்லப்படுகிறது என்பது அதிகமாக அறியப்படுகிறது.
எனவே, மொழிகள் பற்றி திறந்த மனத்துடன் சிந்தித்து மொழி வழியாகவே பதில்
சொல்லக் கூடிய ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
No comments:
Post a Comment