Tuesday, May 12, 2015

ஜெயலலிதா எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பார் என்று நம்புகிறோம் - தமிழர் அரசியல் பிரமுகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன்,

“தமிழ்நாட்டில் வலுவானதொரு தலைவர் இருக்க வேண்டியது இலங்கைத் தமிழர்களுக்கு அவசியம். ஜெயலலிதா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், எமது பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டில் பேசுவதற்கு அதிகாரம் கொண்டு யாரும் இருக்கவில்லை.

சென்னையில் வலுவானதொரு தலைவர் இருப்பதன் மூலம், மீனவர்களின் பிரச்சினைக்குக் கூட தீர்வு காண முடியும்.

ஆனால், நல்லாட்சியை எதிர்பார்க்கும் ஒருவர் என்ற வகையில், 18 ஆண்டுகளாக நீடித்த ஒரு வழக்கில் இருந்து இவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், சி.வி.கே. சிவஞானம், கருத்து வெளியிடுகையில்,

“நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை. ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்துக்கு வருவது இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை தரும்.

எமது போராட்டத்துக்கு  எப்போதும் ஆதரவளித்தவர் என்ற வகையில் அவரது விடுதலையை வரவேற்கிறோம்.  அவர் தொடர்ந்தும் எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பார் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடுகையில்,

“ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இப்போது அவர் ஊழல் கறை இல்லாமல் ஆட்சிக்கு வர முடியும். சட்ட ரீதியாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடைசியாக அதிகாரத்தில் இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்” என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment