Thursday, June 11, 2015

அனந்திக்கு யாழில் சீற்? சிவாஜிலிங்கத்திற்கு வழங்கக்கூடாது என உத்தரவு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சிதைக்கவும் முயற்சி!!

நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு சிவாஜிலிங்கத்திற்கு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்படக்கூடாதென்ற அடிப்படையிலேயே ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அந்த இடத்தினில் சிறீகாந்தா தேர்தல் களம் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு உறுப்பினரான அனந்திக்கு இடம்கொடுக்க கட்சி தலைவர் சம்பந்தன் சம்மதித்திருப்பதாக தெரியவருகின்றது. அண்மையில் சம்பந்தனைச் சந்தித்த சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் எப்பிடியேனும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனந்தி விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூட்டமைப்பு இடம் வழங்க மறுத்தால் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசம் செல்லலாமென எச்சரித்துள்ளனர்.

அத்துடன் தற்போதைய சூழலில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும் வகையினில்  மக்கள் ஆதரவை திரட்டி வைத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அனந்தியையும் இணைத்துக்கொண்டால் அது இரண்டாகிவிடுமென எச்சரித்துள்ளனர்.

எவ்வாறேனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஓரங்கட்ட முற்பட்டுள்ள சம்பந்தன் இதனை கருத்தில் கொண்டு அனந்திக்கு இடம் வழங்க சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வகையினில் யாழில் கூட்டமைப்பு சார்பில் அனந்தி, மாவை, சுரேஸ், சித்தார்த்தன், சரவணபவன், விநாயகமூர்த்தி, சிறீதரன், அருந்தவபாலன், சுமந்திரன் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment