கரடியனாறு வெடிப்புச் சம்பவம் மற்றும் அதில் இரண்டு சீனர்கள் இறந்தது தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான சிறப்புக் குழுவொன்று மட்டக்களப்பு சென்றுள்ளது.
கரடியனாறு காவல் நிலையத்தில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கொள்கலன்களில் ஒன்றில் இருந்து இரு சீனர்கள் வெடிபாருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்ட போதே முதலாவது கொள்கலனில் வெடிப்பு நிகழ்ந்த்து.
அதையடுத்து மூன்று கொள்கலன்களும் அடுத்தடுத்து வெடித்து பாரிய அழிவை ஏற்படுத்தின. இதில் இரு சீனர்களும் இறந்துள்ள நிலையில் கொழும்பிலுள்ள சீனத் தூதுரகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சீனத் தூதுவர் யங் சூபிங் தலைமையிலான சீனத்தூதரக அதிகாரிகள் குழுவொன்று உலங்கு வானூர்தி மூலம் மட்டக்களப்பு சென்றுள்ளது.
சீனத் தூதுவரும் அவரும் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவும் கரடியனாறு பகுதிக்குச் சென்று வெடிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
அம்பாறை – மட்டக்களப்பு வீதி புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்தின் வெடிபொருள் கொள்கலன்களே வெடித்துச் சிதறியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு மற்றும் செங்கலடி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் இறந்துள்ளனர். மேலும் நான்கு காவல்துறையினர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 காவல்துறையினர், இரு சீனர்கள், மற்றும் 07 பொதுமக்கள் என 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 52 பேர் காயமுற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை 40 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 21 பொதுமக்களும் 19 காவல்துறையினரும் உள்ளடங்குவதாக மருத்துவமனைப் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆறு பொதுமக்கள், இரு காவல்துறையினர், இரு சீனர்கள் என 10 பேரின் சடலங்கள் மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கரடியனாறு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக உடனடியாக உரிய விசாரணைகளை நடத்தி அறிக்கை தயாரிக்கும்படி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரியவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment