Friday, December 24, 2010

புத்தாண்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் ஆள் அடையாள அட்டை அறிமுகம்!

tgteதமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் (14.01.2001) முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளது என்ற செய்தியினை மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்வடைகிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடகத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இவ் அடையாள அட்டையில் உரியவர்களது அவசியமான விபரங்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினையையும்(Logo) பொறிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினையைத் தீர்மானிப்பதில் மக்கள் மத்தியிலிருந்து கிடைக்கப் பெறும் வடிவமாதிரிகளையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வமான இலச்சினை எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய தங்கள் எண்ணக்கருவை ஒரு இலச்சினையாக வரைந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்குப் பிந்தாத வகையில் (05.01.2011) எமது செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் வடிவமாதிரிகளிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலச்சினை அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகிறோம்.
தங்கள் இலச்சினை வடிவமாதிரியை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org

No comments:

Post a Comment