Thursday, January 06, 2011

குடாநாட்டில் நடந்த குற்றங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றில் பதிலளிக்க அரசாங்கம் தடுமாறியது


[ வியாழக்கிழமை, 06 சனவரி 2011, 03:29.22 AM GMT +05:30 ]
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் தொடர் கொலைகள், கொள்ளை, சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதற்கு அரசு நேற்றுத் தடுமாறியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை அறியாமல் அவை குறித்து உடனடியாகப் பதில் கூறமுடியாது என அது தெரிவித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கொண்டு வந்த கவனயீர்ப்புப் பிரேரணை தொடர்பிலேயே நாடாளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா இந்தக் கருத்தைத் தெரிவித்தார். பதிலளிப்பதற்கு இன்று வரைக்கும் கால அவகாசமும் கேட்டார் அவர்.
கடந்த இரண்டு மாதங்களாக யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் கொலைகள், கொள்ளைகள், ஆள் கடத்தல்கள் ஆகியவை தொடர்பாக திகதி வாரியாகப் பட்டியல் போட்டுக் காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவை தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். குடாநாட்டு நிலைமைகள் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை முன்வைத்து பேசினார் அவர்.
யாழ். குடாநாட்டில் சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்துள்ளன. அடிக்கடி இராணுவம் நிலை கொண்டுள்ளது. ஆனால் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும், ஆள்கடத்தல்களும் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன.
இந்தச் செயல்கள் ஒருபோதும் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாமல் இடம்பெறும் சாத்தியங்கள் இல்லை. இன்று எமது மக்கள் மரண பீதியுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார் மாவை சேனாதிராஜா. யாழ்ப்பாணத்தில் சட்டமும், ஒழுங்கும் சீரழிந்துள்ளன என்று தெரிவித்த மாவை, இந்தச்சபையில் இருக்கும் மூத்த அமைச்சர்களும், பிரதமரும் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக நேற்று இந்தச் சபையில் கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க செயலாளர் நாயகத்துக்கு முன்னறிவித்தல் கொடுத்திருந்தோம். ஆனால் எமது அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பு தக்க சமயத்தில் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இன்று சமர்ப்பிக்க வேண்டியதாகிவிட்டது. எனவே, பிரதமர் இதற்குப் பதிலளிக்க வேண்டும்' இப்படி மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார்.
குடாநாட்டில் சட்டமும், ஒழுங்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்துப் சபையில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, கூட்டமைப்பிற்கு உடனடியாகப் பதிலளிக்க முடியாது என்றார். பிரேரணை உரியமுறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இதில் எவ்வளவு உண்மைத் தன்மை உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் கூறினார்.
இப்பொழுதுதான் இது எங்கள் கைக்குக் கிடைத்தது. எனவே உடனடியாகப் பதிலளிக்க முடியாது' என்று கூறிய அமைச்சர், நாங்கள் நினைத்து இருந்தால் நீங்கள் இன்று அறிக்கை சமர்ப்பிப்பதையும் தடுத்து இருக்கலாம். ஆனால், மனிதாபிமான விடயம் என்பதால் அனுமதித்தோம் என்றார்.
அமைச்சரின் கூற்றை ஆட்சேபித்தார் ஐ.தே.கட்சி உறுப்பினரான ஜோன் அமரதுங்க.
உங்களுடைய அமைச்சர்களில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தாவே யாழ்ப்பாணத்தில் சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்துள்ளதாக இந்தச் சபையில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் இவ்விவகாரம் தொடர்பாக தனியான ஒரு விவாதம் நடத்துவதற்குப் பரிசீலனை செய்யப்பட்டது. இப்படியான நிலையில் அமைச்சருக்கு சந்தேகம் ஏற்படுவதற்குக் காரணமே இல்லை. எனவே, அமைச்சர் பதில் அளிக்கவேண்டும் என்றார் அவர்.
ஆனாலும், இவ்விடயம் முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை.எனவே,பதில் அளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்றார் அமைச்சர்.
இதேவேளை கூட்டமைப்பு உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைப்படி, முறைப்படி செயலாளர் நாயகத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
நிலையியற் கட்டளையில் குறிப்பிட்டுள்ளதுதான் என்றாலும் பாதுகாப்பு விடயத்துடன் தொடர்புடையது என்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் அறிவித்திருக்கவேண்டும். எனினும், இவ்விடயங்களுக்கு அமைச்சர் நாளை (இன்று)  பதிலளிப்பார்' என்று சபாநாயகர் அறிவித்தார்.

No comments:

Post a Comment