Wednesday, June 22, 2011

23 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர்



ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேர் நேற்று காலை 600 விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர்.


நேற்று நள்ளிரவு கச்சத் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களிடம் ஒலி பெருக்கிகள் மூலம், எங்கள் பகுதியில் மீன் பிடிக்காதீர்கள். உடனடியாக வெளியேறி செல்லுங்கள் என்று எச்சரித்தனர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்ப ஆரம்பித்தனர்.

ஆனால் இதில் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அதிலிருந்த 23 மீனவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். இந்த 5 படகுகளும் தங்கச்சிமடத்தை சேர்ந்த அம்புஜம், ஞானசேகரன், ராமேஸ்வரத்தை சேர்ந்த பொன்னழகு, இருளாண்டி, பால்ராஜ் ஆகியோருக்கு சொந்தமானவை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை தலைமன்னார் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், சிறைபிடித்தும் வந்த இலங்கை கடற்படையினர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதகாலமாக தமிழக மீனவர்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தாமல் இருந்தனர்.

இந் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்தார்.
  முகப்பு

No comments:

Post a Comment