Saturday, July 30, 2011

தன்னையும் கோத்தாபயவையும் குறிவைக்கிறதாம் சனல்-4

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி புதிதாக ஒளிபரப்பிய காணொளி தன் மீதும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீதும் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல் என்று ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தின் மூலம் தமது நோக்கத்தை அடைய முடியாமல் போனதால், தம்மை பழிதீர்க்கும் நோக்கிலேயே புதிய காணாளி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எனக்கு உத்தரவிட்டதாக, இறுதியாக ஒளிபரப்பான காணொளியில் பெர்னாண்டோ என்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.

58 வது டிவிசனின் தளபதி என்ற வகையில் எனது பிரிகேட் தளபதிகளுக்கும், கட்டளை அதிகாரிகளுக்கும் எத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்த போதும், பெர்னாண்டோ என்ற ஒருவர் அங்கு இருக்கவில்லை.

அத்துடன் போரின் இறுதியில் எனது படைப்பிரிவில் இருந்து எந்தவொரு அதிகாரியோ அல்லது ஏனைய தரத்தினரோ விலகி ஓடவில்லை" என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

"தலைகள் இல்லாத சடலங்களை, தான் கண்டதாக பெர்னாண்டோ கூறியுள்ளார்.

ஆனால், ஊடகங்கள் அங்கிருந்தன. படையினர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் மோதலின்போது அத்தகைய காட்சிகளைக் காணவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள் நீண்டகாலமாக தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

“நியுயோர்க்கில் அவர்கள் என்னை எதிர்கொண்டு ஒரு நிமிடம் செவ்வி காணப்போவதாக தெரிவித்தனர். நான் அவர்களுடன் 40 நிமிடங்கள் பேசியதுடன் எனது ஐ.நா. செயலகத்துக்கும் அழைத்துச் சென்றேன்.

எனது பாதுகாப்பு அதிகாரிகளும் நான் சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலை பதிவு செய்தனர். நான் அவற்றை உள்ளூர் ஊடகங்களுக்கும் வழங்கினேன்.

சனல் 4 ஒளிபரப்பிய புதிய காணொளியில் 80 தொடக்கம் 90 வீதமான நேரம் இந்தக் கொலைகளுக்கு என்னையே குற்றம்சாட்டவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவது காணொளியை அவர்கள் ஒளிபரப்பியவுடன் பல அடிப்படைத் தவறுகளும் பக்கச்சார்பான கருத்துக்களும் இருப்பதாக நாம் சுட்டிக்காட்டிய பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான் இப்போது இராஜதந்திரியாக உள்ள போதிலும் இன்னும் இராணுவ சேவையில் இருக்கிறேன்.

எனவே சிறிலங்கா படையினரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக இத்தகைய காணொளிகளை ஒளிபரப்பும் சனல் 4 தொலைக்காட்சியின் நம்பகத்தன்மையை அது கேள்விக்குள்ளாக்குகிறது" என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment