இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணை மீதான விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான பிரேரணை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவாதம் எப்போது நடைபெறும் என்ற சரியான நாளை வெளியிட முடியாது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், இந்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரேரணை மீதான விவாதம் இலங்கையில் உள்ள அனைவருக்கும் அமைதியையும் நீதியையும் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு ஆதரவாக பிரித்தானியாவின் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதியையும் உண்மையையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை ஐ.நா உருவாக்க வேண்டும் என்று இந்தப் பிரேரணை மூலம் கேட்டுக் கொள்ளப்படவுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் இந்தப் பிரேரணைக்கு பெரும்பாலான லிபரல் கட்சி உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என்று நம்பப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment