உள்ளுராட்சி மன்றங்களுக்காக கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்ததையடுத்து கட்சிக்குள் பெரும் பிரச்சினை உருவாகியிருப்பதாக கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் தலைவர் ரணில் விக்கிலமசிங்கவின் தலைமைப் பதவிக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கட்சியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்திவருபவருமான சஜித் பிரேமதாச இவ்விடயம் தொடர்பாக முக்கிய அறிவித்தல் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் எதிர்காலம் தொடர்பாக சஜித் பிரேமதாசவின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.
கட்சித் தலைவர் மீது அதிருப்திகொண்டுள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் இதில் பங்குகொண்டார்கள். குறிப்பாக றோசி சேனநாயக்க, தலதா அத்துக்கொரளை, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே முக்கிய அறிவித்தல் ஒன்று சஜித் பிரேமதாசவினால் இன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும், இது தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு சஜித் பிரேமதாச மறுத்திருக்கின்ற போதிலும், அந்த முக்கிய அறிவிப்பை இன்று நீங்கள் அறிந்துகொள்ளலாம் என சஜித்தின் அணியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். கட்சி தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துவருவதைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை தாம் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 65 உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலில் ஐ.தே.க. போட்டியிட்ட போதிலும் அவை அனைத்திலும் அதற்குத் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் கட்சி சந்திக்கும் இந்தத் தொடர்ச்சியான தோல்விகளுக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்ற வேண்டும் என பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
No comments:
Post a Comment