இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இவர் இது தொடர்பாக கூறியவை வருமாறு:
வடக்கிலும், கிழக்கிலும் தற்போது தேவைப்படுவது அரசியல் தீர்வாகும். எனினும், அபிவிருத்தியைப் புறம் தள்ள முடியாது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு வழங்கப்பட்டால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். இதனை நன்றாகப் புரிந்து கொண்டு உள்ள ஜனாதிபதி அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நியாயமானவை. எனினும், பொலிஸ் அதிகாரங்களுக்கு அதிக அக்கறை செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் மாகாண சபைகளுக்கும் தற்பொழுது பொலிஸ் அதிகாரம் உள்ளது. அதனால் பொலிஸ் அதிகாரம் குறித்து தமிழ் மக்கள் அதிகளவில் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை.
காணி அதிகாரம் நியாயமான கோரிக்கை ஆகும். ஏனென்றால் தற்சமயம் மத்திய அரசு, மாகாண மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய பிரிவுகளில் காணி அதிகாரம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவை அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் தீர்வு பேச்சு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் போன்றவர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
யுத்த குற்ற விசாரணை, சனல் 4 தொலைக்காட்சியின் யுத்தக் குற்ற ஆவணத் திரைப்படம் ஆகியன தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பிரிட்டனில் தெரிவித்து உள்ள கருத்துகள் வரவேற்கத் தக்கவை. இலங்கையர்கள் மீண்டுமொரு யுத்தத்தை விரும்பவில்லை. எனவே, யுத்தத்தை நினைவூட்டும் விடயங்களை மீண்டும் மீண்டும் கண் முன்னே கொண்டுவந்து விசாரணை செய்கின்றமையிலும் பயன் இல்லை. 30 வருடங்களின் பின்னர் வடக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். இதுவே உண்மையான நல்லாட்சி.
No comments:
Post a Comment