சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வேறுவிதமாக கூறிவருவதாக ஐ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் சனல் 4 தொலைக்காட்சிச் சேவை தவறான தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் அதற்கெதிராக நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அண்மைய நாட்கள் வரை கூறிவந்தார்.
ஆனால் திடீரென அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பாட்டிருப்பதை நேற்று அவதானிக்க முடிந்தது. ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சனல் 4வுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியாதெனவும் சட்ட ரீதியாக அதனைச் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
சனல் 4 வை தொடர்ச்சியாக கண்டித்தும், எதிர்த்தும் ஆட்சேபித்தும் வந்த அரசாங்கம் திடீரென அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமென்னவென நாட்டு மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டும்.
அரசாங்கத்தின் வெளிநாட்டு இராஜதந்திர அணுகு முறையின் பின்னடைவு காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் திடீர் மாற்றம் நாட்டுக்கு மேலும் அபகீர்த்தியை கொண்டுவரக் கூடியதாகும். சர்வதேசக் குற்றச்சாட்டுக்கு இலங்கை ஆளாக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்படலாம். அரசின் அண்மைக் காலச் செற்பாடுகள் நாட்டை பலவீனப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. நல்லாட்சிக்குப் பதிலாக ஊழலும், முறைகேடுகளுமே மலிந்து சீர்குலைந்த நிர்வாகமே நடந்து கொண்டிருக்கின்றது எனவும் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment